சாம்பியன்ஸ் டிராபியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தைப் பழி தீர்த்த இந்தியா

6 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தைப் பழி தீர்த்த இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

3 நிமிடங்களுக்கு முன்னர்

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றுள்ளது.

துபையில் இன்று (மார்ச் 09) நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இதே சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பழிதீர்த்துள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. 252 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்து இந்த தொடரில் வெற்றி பெற்றது.

கடந்த 2002ம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி பகிர்ந்து கொண்டது. அதன்பின் 2013ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது. அதன்பின் 3வது முறையாக ரோஹித் சர்மா தலைமையில் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.

ஐசிசி சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட 23 போட்டிகளில் இந்திய அணி 22 போட்டிகளில் வென்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி தோற்றது மற்ற எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆதிக்கம் செலுத்திய சுழற்பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமானவர்கள் அவ்வணியின் சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நால்வர்தான்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள், 38 ஓவர்களை வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டனர். 144 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் அவர்கள் வீழத்தினர். இந்த 38 ஓவர்களில் 125 பந்துகளை டாட் பந்துகளாக வீசினர் அதாவது சுமார் 20 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்கவில்லை.

ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர், 12 ஓவர்கள் வீசி 103 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தனர். நியூசிலாந்து முதல் 8 ஓவர்களும், கடைசி 10 ஓவர்கள் மட்டுமே கைவசம் வைத்திருந்தது. மற்ற 32 ஓவர்களையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள்தான் சிறப்பாக விளையாடினார்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி தவறவிடக்கூடாத வீரர்

இந்திய அணிக்கு கிடைத்திருக்கக்கூடிய பொக்கிஷமான வீரராக இந்தத் தொடரில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் வருண் சக்ரவர்த்தி, ஷ்ரேயாஸ் ஐயர். இருவருக்கும் குறைந்த அளவே வாய்ப்புகளையே இந்திய அணி நிர்வாகம் வழங்கியது. உச்சகட்டமாக ஸ்ரேயாஸ் ஐயரை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தரம் இறக்கியது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டுப் போட்டிகளி்ல் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி, மீண்டும் அணிக்குள் வந்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி தொடக்கத்தில் இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஸ்ரேயாஸ் சிறப்பாகப் பயன்படுத்தினார்.

இந்தத் தொடரில் 235 ரன்கள் குவித்து 49 சராசரி வைத்துள்ளார், அதிகபட்சமாக 79 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெல்வதற்கு நடுப்பகுதி ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் ஆகச்சிறந்தது.

இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் அக்ஸர் படேலுடன் இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்ரேயாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை இந்திய அணி இனிவரும் தொடர்களில் சிறப்பாக பயன்படுத்தும் என நம்பலாம்.

அதேபோல வருண் சக்ரவர்த்தியை 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இந்திய அணி கழற்றிவிட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப்பின் தனக்குக் கிடைத்த வாய்ப்பை வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பயன்படுத்தி தன்னை நிராகரித்தது தவறு என நிரூபித்தார்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ரவீந்திரா அச்சுறுத்தல்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்கு தோள்பட்டை காயம் குணமாகவில்லை என்பதால், ஸ்மித் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரச்சின் ரவீந்திரா, வில் யங் ஆட்டத்தைத் தொடங்கினர். ரவீந்திரா அதிரடியாகத் தொடங்கி ஹர்திக் பாண்டியா ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.

7 ஓவர்களில் நியூசிலாந்து அணி 50 ரன்களை வேகமாக எட்டியது. ரவீந்திராவுக்கு ஷமி ஒரு கேட்ச் வாய்ப்பைக் தவறிவிட்டார், வருண் ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு கேட்சை தவறவிட்டார்.

வருண், குல்தீப் மாயஜாலம்

இருவரையும் பிரிக்க வருண் சக்ரவர்த்தி அழைக்கப்பட்டார். வருண் வீசிய முதல் ஓவரில் வில் யங் கால்காப்பில் வாங்கி 15 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வில்லியம்ஸன் வந்தாலும் நிலைக்கவிடவில்லை. குல்தீப் வீசிய 11-வது ஓவரில் பந்தை இன்கட் செய்ய ரவீந்திரா முயன்றபோது க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்து 37 ரன்களில் வெளியேறினார். ரவீந்திரா வெளியேறியது இந்திய அணிக்கு பெரிய நிம்மதியை அளித்தது.

குல்தீப் வீசிய 13-வது ஓவரில் வில்லியம்ஸன் ஓவர்ஸ்டெப் எடுத்துவந்து ஸ்ட்ரோக் வைக்க முயன்றபோது, அவரிடமே கேட்ச் கொடுத்து 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். குல்தீப் வீசிய இந்த பந்து அற்புதமானது, வழக்கமாக பந்தை "டாஸ்" செய்வதைவிட, சற்று கூடுதலாக டாஸ் செய்து வேகத்தைக் குறைத்தார். இதை சற்றும் கவனிக்காத வில்லியம்ஸன் பேட்டை வேகமாக ஸ்ட்ரோக் வைக்க முயலவே பந்து குல்தீப்பிடமே கேட்சானது. இரு மிகப்பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திய நிம்மதி இந்திய அணிக்கு ஏற்பட்டது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தலைகீழ் மாற்றம்

57 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த நியூசிலாந்து, அடுத்த 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. முதல் 10 ஓவர்கள் வரை 7 ரன்ரேட்டில் சென்ற நியூசிலாந்து நிலைமை அப்படியே தலைகீழானது.

நால்வர் ஆதிக்கம்

12வது ஓவர்களுக்கு மேல் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப், வருண் ஆகிய 4 பேரும் சேர்ந்து நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டனர். 19.2 ஓவர்களில்தான் நியூசிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. முதல் 10 ஓவர்களில் 7 ரன்ரேட்டில் சென்ற நியூசிலாந்து, அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் ரன்ரேட் 3.20 ஆகக் குறைந்தது.

ஜடேஜாவின் பந்துவீச்சில் டாம் லேதம் 14 ரன்களி்ல் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். நியூசிலாந்து 108 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்தது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

81 பந்துகளாக பவுண்டரி இல்லை

5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ், மிட்ஷெல் ஜோடி சேர்ந்தனர். இருவரையும் பவுண்டரி கூட அடிக்கவிடாமல் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலின் 14-வது ஓவரில் பவுண்டரி அடித்தநிலையில் அதன்பின் 27-வது ஓவரில்தான் பவுண்டரி அடித்தனர்.

10 ஓவரில் 69 ரன்கள் இருந்த நியூசிலாந்து அணி 138 ரன்கள் அதாவது அடுத்த 69 ரன்கள் சேர்க்க 21 ஓவர்கள் எடுத்துக்கொண்டனர், இந்த 21 ஓவர்களில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர்.

மிட்ஷெல், பிலிப்ஸ் இருவரும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தால் 150 ரன்களை எட்டியது. இருவரையும் பிரிக்க மீண்டும் வருண் அழைக்கப்பட்டார். வருண் வீசிய 37-வது ஓவரில் பிலிப்ஸ் 34 ரன்கள் சேர்த்திருந்த போது க்ளீ்ன் போல்டாகி வெளியேறினார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.

பிரேஸ்வெல் அதிரடி ஆட்டம்

அடுத்து பிரேஸ்வெல் களமிறங்கினார். மிகவும் நிதானமாக ஆடிய டேரல் மிட்ஷெல் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் மெதுவாக அடித்த அரைசதமாகும்.

பிரேஸ்வெல் களத்துக்கு வந்தது முதல் வேகமாக ரன்களைச் சேர்த்ததால், ரன்ரேட் உயர்ந்தது. கடைசி 10 ஓவர்களை நியூசிலாந்து பேட்டர் பிரேஸ்வெல் நன்கு பயன்படுத்தினார். இந்த 10 ஓவர்களையும் இந்திய பந்துவீச்சாளர்களை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால், நியூசிலாந்து அணி 250 ரன்களை எட்டியிருக்காது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 79 ரன்கள் சேர்த்தது.

ஷமி வீசிய 46-வது ஓவரில் டேரல் மிட்ஷெல் 63 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேஸ்வெல் 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு251 ரன்கள் சேர்த்தது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் அதிரடி ஆட்டம்

252 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மான் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மா கடந்த போட்டிகளைப் போல் இல்லாமல் அதிரடியாகத் தொடங்கினார், முதல் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர்,2 பவுண்டரிகள் விளாசியதால் ரன்ரேட் உயர்ந்தது. ரோஹித்தின் அதிரடியை நிறுத்த சுழற்பந்துவீச்சாளர்கைக் கொண்டு வந்தனர். 41 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.

இந்திய அணியும் 44 பந்துகளில் 50 ரன்களை எட்டினாலும், சுழற்பந்துவீச்சு வந்ததும் ரன்ரேட் குறைந்து 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்தது, 16வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. இந்திய அணி வெற்றி இலக்கை 40% எட்டியிருந்தது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

விக்கெட் சரிவு

சான்ட்னர் வீசிய 19-வது ஓவரில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து, கில் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கில் கணக்கில் ஒரு சிக்ஸர் மட்டுமே, பவுண்டரி அடிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த விராட் கோலி ஒரு ரன்னில் பிரேஸ்வெல் வீசிய முதல் ஓவர் முதல்பந்தில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்திய அணியின் ரன்ரேட் சற்று இறுகியது.

3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஸ்ரேயாஸ் சேர்ந்தார். விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் ரோஹித் ஒரு ரன், 2 ரன்னில் கவனம் செலுத்தியதால் ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது. 41 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் 76 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார்.

ரவீந்திரா பந்துவீச்சில் இறங்கி அடிக்க முற்பட்டு விக்கெட் கீப்பர் லேதமால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ரோஹித் 76 ரன்னில் ஆட்டமிழந்தார், இதில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

ஸ்ரேயாஸ், அக்ஸர் இணைந்து அணியை வெற்றி நோக்கி மெதுவாக நகர்த்தினர். பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் லாங்ஆன் திசையில் அடித்த ஷாட்டை ஜேமிஸன் தவறவிட்டார். இந்த வாய்ப்பை ஸ்ரேயாஸ் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால், சான்ட்னர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ராகுல் களமிறங்கினார். அக்ஸர் படேல் நிதானாக ஆடி வந்தநிலையில் பெரிய ஷாட்களுக்கு அடிக்கடி முயன்றார். பிரேஸ்வெல் பந்துவீச்சில் ரூர்க்கிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்னில் அக்ஸர் படேல் விக்கெட்டை இழந்தார்.

ராகுல், ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். கடைசி 32 பந்துகளில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திரா வீசிய 46-வது ஓவரில் ஹர்திக் சிக்ஸர் அடித்து பதற்றத்தைக் குறைத்தார். ரூர்க் வீசிய 47-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கவே வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

ஜேமிஸன் வீசிய 48-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பெரியஷாட்டுக்கு முயன்று அவரிடமே கேட்ச் கொடுத்து 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ரூர்க் வீசிய 49-வது ஓவரில் 5 ரன்கள் சேர்த்தநிலையில் கடைசிப்பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார்.

49-வது ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்து 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஜடேஜா 9 ரன்னிலும், ராகுல் 34 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

2013ம் ஆண்டு தோனி தலைமையில் வென்றதற்குப்பின் 2வது முழுமையான கோப்பையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article