ARTICLE AD BOX
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வீரர்கள் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் குல்தீப் யாதவ் பெற்றார். ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டியுள்ளார்.
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர் குல்தீப் தனது சுழற்பந்து வீச்சால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்து ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார். அவர் ஒன்பது ஓவர்களில் 40 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
சிறப்பான பந்துவீச்சின் மூலம் குல்தீப் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 5வது இந்திய சுழற்பந்துவீச்சாளராக இணைந்துள்ளார். இவருக்கு முன்பு அனில் கும்ப்ளே (953), ரவிச்சந்திரன் அஸ்வின் (765), ஹர்பஜன் சிங் (707) மற்றும் ரவீந்திர ஜடேஜா (604) ஆகியோர் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கடந்த 13வது இந்திய வீரர் குல்தீப்.
குல்தீப் தனது சுழல் வலையை விரித்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை குழப்பினார். பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சல்மான் ஆகாவை (19) வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே ஷாஹீன் அப்ரிடியை கூக்ளியால் கிளீன் போல்டு ஆக்கினார்.
பின்னர் ஆட்டத்தின் பிற்பகுதியில் நசீம் ஷாவையும் தனது சூழலில் சிக்க வைத்து வீழ்த்தினார். குல்தீப் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்தப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 200 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். முகமது ஷமி காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறியதும், ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். எட்டு ஓவர்கள் வீசிய அவர் 31 ரன்களை மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். தொடக்க வீரர் பாபர் ஆஸம் மற்றும் அரைசதம் அடித்த சவுத் ஷகீல் இருவரையும் வெளியேற்றினார்.