ARTICLE AD BOX
Published : 01 Feb 2025 04:47 PM
Last Updated : 01 Feb 2025 04:47 PM
“பிஹார் மாநிலத்துக்கான பட்ஜெட் இது!” - செல்வப்பெருந்தகை விமர்சனம்
<?php // } ?>சென்னை: “மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. தொடக்கத்தில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரப்போவதாக நிதியமைச்சர் கூறினார். ஆனால், அவர் அறிவித்த அறிவிப்புகள் பிஹார் மாநிலத்துக்கு ஜாக்பாட் அடித்த அளவுக்கு 5 திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கிறார். பிஹாருக்கு அதிக நிதி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் திருக்குறளை மட்டும் படித்து விட்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை புறக்கணித்திருக்கிறார்.
விவசாயிகளின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, கடன் நிவாரணம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சீர்திருத்தம் போன்றவற்றைக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், மத்திய பாஜக அரசு 2014 முதல் 2024 வரை ரூபாய் 25 லட்சம் கோடி வாராக் கடனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூபாய் 14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இது ஒரு விவசாயிகளின் விரோத பட்ஜெட் ஆகும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்குகிற சிறு, குறு தொழில்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் அப்பட்டமான பாரபட்சத்தோடு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
உலகத்திலேயே வேகமாக வளர்கிற பொருளாதார நாடு இந்தியா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி பேசுகிற நிர்மலா சீதாராமன், சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரமாக இருப்பதை குறிப்பிட மறுக்கிறார்.
1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, மொத்த கடன் சுமை ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிற மத்திய பாஜக அரசு, மேலும் 14.82 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், ஒவ்வொரு இந்தியர் மீதும் ஏற்கனவே ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் கடன் சுமை இருக்கிறது. இதை மேலும் கூட்டுவதற்கு பாஜக அரசு முயற்சி செய்கிறது.
அதேபோல,காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 74 சதவிகிதமாக இருந்தது, தற்போது அது 100 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
நிதிநிலை அறிக்கையில் அரசு முதலீடு, அந்நிய முதலீடு, தனியார் முதலீடுகளை அதிகரிக்கவோ, அதன்மூலம் வளர்ச்சியை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்கி, தேவைகளை அதிகரிக்கவோ, நுகர்வுகளை உயர்த்தவோ நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை. உணவு தானியங்களின் விலை உயர்வு, மருத்துவ செலவு உயர்வு, கல்வி மற்றும் படிப்புக்கான செலவு உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் 8.1 சதவிகிதமாக அதிகரித்திருப்பது போன்றவற்றால் ஏழை, எளிய மக்கள் வாங்கும் சக்தி குறைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகமிக குறைவாகும். மத்திய அரசு இத்திட்டத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை 4315 கோடி ரூபாய் வழங்கப்படாததால், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் எதுவும் கூறவில்லை.
நிர்மலா சீதாராமன் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று சொன்னால், அது ரூபாய் 12 லட்சம் ஆண்டுக்கு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை என்று அறிவித்தது தான். இந்தியாவில் மொத்தம் வருமான வரி செலுத்துபவர்கள் 8 கோடி பேர். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 7 சதவிகிதமாக உள்ளனர். அதில், 5 கோடி பேர் வருமான வரி கணக்கை சமர்ப்பித்து வரி செலுத்தாதவர்கள். மீதமுள்ள 3 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துபவர்கள்.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 140 கோடி பேரில் 2 சதவிகித பேருக்கு தான் இந்த வரிவிலக்கு பொருந்தும். மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். ஆக, மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான் இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற நோக்கம் கொண்டதாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கானதாக இல்லாமல் பிஹார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
- மேடையில் ரசிகைகளுக்கு ‘முத்தம்’ - சர்ச்சையில் உதித் நாராயணன்
- 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியில் முழு விலக்கு: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
- “பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மத்திய பட்ஜெட்” - முத்தரசன்