ARTICLE AD BOX
Published : 01 Feb 2025 08:08 PM
Last Updated : 01 Feb 2025 08:08 PM
‘இந்த பட்ஜெட்டிலும் தமிழகம் புறக்கணிப்பு’ - மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்
<?php // } ?>சென்னை: “தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்துக்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன்.
இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பை எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது. அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழகத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்துக்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ‘விடாமுயற்சி’ பட ‘சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷனுக்கு வரவேற்பு!
- ரூ.12 லட்சம் வரை ‘No Tax’, விலை உயரும், குறையும் பொருட்கள்: பட்ஜெட் 2025-ன் டாப் 10 ஹைலைட்ஸ்
- “யானைப் பசிக்கு சோளப்பொரி”- மத்திய பட்ஜெட் 2025 மீது பிரேமலதா விமர்சனம்
- “மக்களுக்கான அரசியலை முன்வைத்து...” - தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு