ARTICLE AD BOX
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர் திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஜென்டில்மென் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் பல தயாரிப்பாளர்கள் ஷங்கரை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டினர். இதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி என அடுத்தடுத்த படங்களும் ஹிட் படங்களாகவே அமைந்தன. இதனை தொடர்ந்து ஹிட் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை வைத்து மிக அதிக பொருட்செலவில் இவரது இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து ரூ.290 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
அந்த சமயத்தில் ‘எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், தான் எழுதிய ஜூகிபா கதை, ‘திக்திக் தீபிகா' என்ற நாவல் கதையை திருடி ஷங்கர் ‘எந்திரன்' படத்தை இயக்கி உள்ளார். எனவே காப்புரிமை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த மனுவின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்' திரைப்படத்தையும், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜூகிபா' (திக்திக் தீபிகா) நாவலையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தியது. அதில் ‘எந்திரன்' திரைப்படம் ஜூகிபா நாவலை தழுவி எடுக்கப்பட்டிருப்பது உறுதியானதை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியதாக கூறி, அவருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் இயக்குனர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு விசாரணை நடத்தி இருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
ஷங்கரின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 மற்றும் தற்போது வெளியான கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. சமீபகாலமாக சற்று பின்னடைவை சந்தித்து வந்த ஷங்கருக்கு அதிர்ச்சியாக்கும் வகையில் தற்போது ஒரு இந்த செய்தி வெளியாகியுள்ளது.