ARTICLE AD BOX
சென்னையில் பிப்ரவரி முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. புதிதாக கொண்டு வரப்படும் திட்டத்தின் படி 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சிலப் பகுதிகளில் பிப்ரவரி முதல் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்தனர்.