Rajya Sabha MP Kejriwal: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் கெஜ்ரிவால். எனவே, சட்டமன்றத்திற்கு சஞ்சீவ் அரோராவை அனுப்பிவிட்டு, தானே மாநிலங்களவை செல்ல கெஜ்ரிவால் பிளான் செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய தலைநகர் டெல்லியை பாஜக கைப்பற்றியது. முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களே தோல்வி அடைந்தனர். இதனால், டெல்லி சட்டமன்றத்திற்கு போக முடியாத அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளப்பட்டுள்ளார்.

சட்டமன்றத்திற்கு போக முடியாத கெஜ்ரிவால், நாடாளுமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கியுள்ளது ஆம் ஆத்மி.

கடந்த மாதம் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, தற்செயலாக அந்த துப்பாக்கி சூடப்பட்டு அதிலிருந்து வந்த குண்டு குர்பிரீத் கோகியை பதம் பார்த்தது. அதில், அவர் உயிரிழந்தார்.

அவரின் இறப்பை தொடர்ந்து லூதியானா மேற்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில்தான், ஆம் ஆத்மி சார்பில் எம்பி சஞ்சீவ் அரோரா போட்டியிட உள்ளார். ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எனவே, சஞ்சீவ் அரோராவை எம்எல்ஏ ஆக்கிவிட்டு, தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக கெஜ்ரிவால் பிளான் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. கெஜ்ரிவாலை ஒரு இடத்தில் சுருக்கிவிட விரும்பவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபாவுக்குப் போகவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலைப் பொறுத்தவரை, அவர் பஞ்சாப் முதல்வராக வருவார் என்று ஊடக வட்டாரங்கள் முன்பு கூறி வந்தன. இப்போது, அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு தகவல்களும் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவரது தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவரை ஒரு இடத்தில் சுருக்கவில்லை" என்றார்.