ARTICLE AD BOX
முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது போராட்டம் நடத்தவிருப்பதாக ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் மராத்திய அரசரான சம்பாஜி மகாராஜாவை கொடுமைப்படுத்திக் கொன்றதாக சமீபத்தில் வெளியான சாவா திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பாஜி மகாராஜா மற்றும் ஔரங்கசீப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க| பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது!
மேலும், பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும் என்று ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம் என்றும் தெரிவித்து மாநில அரசிடம் மனு அளிக்க பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க| அமிர்தசரஸ் கோயிலில் கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை
இதுகுறித்துப் பேசிய விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே, “ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவு சிறிய முன்னெடுப்புகள் மூலம் தொடங்கப்படும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கை வைத்தல், உருவ பொம்மை எரிப்பு, கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகருக்கு ஊர்வலம் செல்வோம்” என்று தெரிவித்தார்.
ஔரங்கசீப் கல்லறை இடிப்பது தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரி. அவரின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என்று பேசியுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார், “மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு ஹிந்து அமைப்புகள் கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினனார்.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஔரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு அஸ்மியை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சட்டப்பேரவைக்கு வர தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.