ARTICLE AD BOX
சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால், அந்தத் தொடர் துவங்கி ஐந்து நாட்களிலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பாகிஸ்தான் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. இதை அடுத்து பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்தது. இந்த பிரிவில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது. அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்.

அடுத்து வங்கதேச அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு நூலிழையில் தப்பிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன.
வெறும் ஐந்து நாட்களிலேயே தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி அந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டி இருந்தாலும் அது ஒரு ஆறுதலுக்காக விளையாடும் போட்டியாகவே அமையும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானில் இதுவரை செய்யப்பட்டு வந்த விளம்பரங்கள், அதிகப்படியான முகஸ்துதிகள் எல்லாம் ஐந்து நாட்களில் தவிடு பொடியாகி உள்ளது. ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் அந்த நாட்டின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தற்போது மேலும் ஒரு அடியாக அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் அந்த அணி இழந்து இருக்கிறது.
பாகிஸ்தானின் தலைவிதியை தீர்மானிக்கும் அணியாக இருந்த வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் அந்த வெற்றி இலக்கை எட்டியது. ரச்சின் ரவீந்திரா அபாரமாக ஆடி 112 ரன்கள் எடுத்து இருந்தார்.