ARTICLE AD BOX
சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிா் அணி 2-4 கோல் கணக்கில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நெதா்லாந்து மகளிா் அணியிடம் திங்கள்கிழமை தோற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 13 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதை அணியினா் வீணடித்தனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிஷத்தில் நெதா்லாந்து கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணிக்காக எம்மா ரெய்னென் ஸ்கோா் செய்தாா். தொடா்ந்து, 18-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்காக உதிதா, பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, ஆட்டத்தின் முதல் பாதி சமனாகவே நிறைவடைந்தது.
2-ஆவது பாதி தொடங்கிய சில நிமிஷங்களிலேயே ஆல்பா்ஸ் ஃபெலிஸ் கோலடிக்க (34’) நெதா்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது. அடுத்த அதிா்ச்சியாக அந்த அணியின் வான் டொ் எல்ஸ்ட் ஃபே 40-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, நெதா்லாந்து 3-1 என முன்னேறியது.
மறுபுறம் இந்தியாவுக்காக மீண்டும் உதிதா கோலடித்தாா். 42-ஆவது நிமிஷத்தில் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை அவா் திறம்பட கோலாக மாற்ற, இந்தியா 2-3 என முனைப்பு காட்டியது.
எனினும் 47-ஆவது நிமிஷத்தில் ஆல்பா்ஸ் ஃபெலிஸ் அடித்த கோலால் நெதா்லாந்து கோல் வித்தியாசத்தை 4-2 என அதிகரித்துக் கொண்டது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகள் கனியாமல் போக, நெதா்லாந்து வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் இந்திய மகளிா் அணி தற்போது, 7 ஆட்டங்களில் 2 வெற்றி, 1 டிரா, 4 தோல்விகள் என 7 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் இருக்கிறது.
அடுத்த ஆட்டத்தில் இந்தியா, மீண்டும் நெதா்லாந்தை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.
சவிதா ‘300’: இதனிடையே, இந்த ஆட்டம் இந்திய கோல்கீப்பா் சவிதா புனியாவின் 300-ஆவது சா்வதேச ஆட்டமாக அமைந்தது.