ARTICLE AD BOX
பர்சனல் லோன் வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் பெற இந்த 4 டிப்ஸை செக் பண்ணுங்க!
இன்றைய சூழலில் பலருக்கும் பர்சனல் லோன்கள் உதவிகரமான ஒன்றாக மாறியுள்ளன. மருத்துவச் செலவுகள், திருமணங்கள் அல்லது பயணம் என தங்களுக்கு பணம் தேவைப்படும் நேரங்களில் விரைவாக கடன் பெற இவை உதவுகிறது. அதோடு பல வங்கிகள் மக்களை தொடர்பு கொண்டு பர்சனல் லோன்களை வழங்கி வருகின்றன. பர்சனல் லோன்களை அவசரத்திற்கு வாங்கினாலும் அவற்றுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பர்சனல் லோன்களை பெறுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?: பர்சனல் லோன்களை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை வீண் செலவு செய்ய பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டுகளோடு ஒப்பிடுகையில் பர்சனல் லோன்களுக்கு வட்டி விகிதம் குறைவுதான். இருந்தாலும் இன்னும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வேண்டுமானால் அதற்கு சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரித்தல்: பொதுவாக நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் பர்சனல் லோன்கள் மட்டும் அல்ல. எந்தவித கடனையும் பிரச்சனை இல்லாமல் பெறலாம். அதற்கு நீங்கள் எப்போது கடன் வாங்கினாலும், அதை சரிவர திருப்பிச் செலுத்த வேண்டும். உங்களிடம் 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால்.. எந்தப் பிரச்சனையும் இல்லை. தாராளமாக உங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும். இந்த ஒரு கிரெடிட் ஸ்கோரை வைத்தே வங்கிகள் உங்களுடைய நிதி நடத்தையை தெரிந்து கொண்டு விடும். அதோடு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கும்.
வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள்: அனைத்து கடன் வழங்குனர்களும் ஒரே வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதில்லை. எனவே வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பர்சனல் லோன்களுக்கான வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பாருங்கள். எந்த நிறுவனம் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறதோ அதை தேர்வு செய்யலாம். சிலர் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்வு செய்து கடன் பெறுவர். இது முற்றிலும் தவறு. குறைந்த வட்டியில் கடன் பெற பிற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தையும் விசாரிக்க வேண்டும்.
குறைந்த கடன் காலத்தை தேர்வு செய்யுங்கள்: சிலர் மாதம் மாதம் குறைந்த ஈஎம்ஐ வருகிறது என்பதற்காக நீண்ட நாட்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொள்வர். ஆனால் அப்படி தேர்வு செய்யும்போது அதிக வட்டி செலுத்த வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய கடன் காலம் அதிகரிக்க அதிகரிக்க வட்டியும் அதிகரிக்கும். எனவே முடிந்த அளவிற்கு உங்களுடைய கடன் காலத்தை குறைவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் வருமானத்தை கருத்தில் கொள்ளுங்கள்: கடன் பெறும்போது உங்களால் அதை சரிவர திருப்பிச் செலுத்த முடியுமா? என்பதைத் தெரிந்து கொண்டு கடன் பெறுங்கள். சிலருக்கு கடன் வாங்கிய பிறகு வேலையை விட வேண்டிய சூழல் ஏற்படலாம் இது போன்ற நேரங்களில் ஈஎம்ஐ செலுத்துவது தாமதமாகலாம். இதனால் கிரெடிட் ஸ்கோர் குறைந்து எதிர்கால கடன் வாய்ப்புகளை பெற முடியாமல் போகலாம். எனவே நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது உங்களால் அதை சரிவர திருப்பி செலுத்த முடியுமா? என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.