ARTICLE AD BOX
மும்பை: ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுத்தின் சித்திக். இவர் பல வருடங்களுக்கு முன் ‘ஹே ராம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த சம்பவத்தை பற்றி இப்போது சொல்லியிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், “அந்த சமயத்தில் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தேந். ஹேராம் படத்தில் ஒரு நல்ல ரோல். கமல் சார் கேரக்டரை காப்பாத்துற ஒருத்தரோட ரோல் அது. என்னோட ஃபேவரைட் நடிகரோட சேர்ந்து நடிக்கிற சான்ஸ் கிடைச்சதால் ரொம்பவே சந்தோஷமாக இருந்தேன். படத்தின் பிரீமியர் வந்தபோது, பெரிய திரையில முதல் முறையாக என்னைப் பார்க்க வேண்டிய ஆசையில் இருந்தேன். எல்லா நண்பர்களையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன்.
ஆனால் கடைசி நேரத்தில் எனது காட்சியை நீக்கியிருக்கிறார்கள். பிரீமியர்லயே கமலே வந்து இதை என்னிடம் சொன்னார். அவ்வளவு பெரிய நடிகர், துணை நடிகராக நடித்த என்னிடம் இதை சொல்ல வேண்டியதே கிடையாது. ஆனால் நான் நிறைய ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்ததைப் பார்த்துட்டு, கமல் என்னிடம் வந்து, “உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உங்க சீன் கட் பண்ணிட்டதா சொல்லிடுங்க. இது படத்தோட தேவைக்காக நடந்தது”ன்னு சொன்னார்.
அப்போ நான், “இந்த சீனை எப்படியாவது படத்துல சேர்க்க முடியுமானு” கேட்டேன். ஆனா, அடுத்த நாளே படம் ரிலீஸ். அதனால் வாய்ப்பே இல்ல என சொல்லிவிட்டார் கமல். அப்போது சினிமா பற்றிய புரிதல் இல்லாததால் நான் அப்படி கேட்டுவிட்டேன். படத்தில் என் காட்சி இல்லாததால் அன்று அழுதபடி இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு அந்த அழுகை நினைவில்லை. கமல்ஹாசன் என்னிடம் அன்பாக நடந்து கொண்ட அந்த தருணம்தான் நினைவில் இருக்கிறது’’. இவ்வாறு நவாசுத்தின் சித்திக் கூறியுள்ளார்.