ARTICLE AD BOX
நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே பூந்தோட்ட தெருவை சேர்ந்த செல்லதுரை (வயது 48) என்பவர் தாழையூத்து பஸ் ஸ்டாப் அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2020ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து பார்க்கும் பொழுது கடையில் வைத்திருந்த ரூ.1,02,000 பணத்தை காணவில்லை.
இதுகுறித்து செல்லதுரை தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தாழையூத்து காவல் துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்லத்துரை நடத்தி வரும் ஹோட்டலில் பணிபுரியும் மானூர், குறிச்சிகுளம், வடக்கு தெருவை சேர்ந்த சேக்மைதீன் (வயது 35) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (17.03.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார், குற்றவாளி சேக்மைதீனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் தொடர்புடைய நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தாழையூத்து உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதி ராஜா மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.