ARTICLE AD BOX
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ளது டிஆர் பஜார் பகுதி. இங்குள்ள டி ஆர் லீஸ் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் (5), பிரணிதா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது வீட்டிற்கு அருகே மலை காய்கறி பயிர்கள் விவசாய பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கையான நீர்க் குட்டை ஒன்று உள்ளது.
இதையடுத்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் காணாமல் போனதை அடுத்து இரு குழந்தைகளையும் தேடியுள்ளனர். அப்போது இரு குழந்தைகளும் நீர்க் குட்டைக்குள் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களை இருவரையும் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், கூடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.