ARTICLE AD BOX
நம் வீட்டு குழந்தை தரையில் விழுந்து முட்டியில், முகத்தில் அடிபட்டு பின் எதையோ பிடித்து எழுந்து நிற்கும்போது பெற்றோர் அக மகிழ்ந்து போவார்கள். ஏனெனில் அது அந்த குழந்தையின் வெற்றி. எழுந்து நிற்பதற்காக கீழே விழுந்து அடிபடுவது என்பது அங்கு குழந்தையின் ரிஸ்க்.
இடர்பாடுகளை துணிந்து ஏற்றல் என்பதற்கான ஆங்கில பதம் தான் ரிஸ்க். ஒரு சிலர் "ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல" என்று சொல்வார்கள். இது ஒரு எதுகை மோனை சொற்றொடராக இருந்தாலும் இதில் உள்ள அர்த்தத்தை நாம் பார்க்க வேண்டும். அதாவது ரிஸ்க் எடுப்பதை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதே அதன் பொருள்.
தெரியாத தொழிலில் அல்லது பணியில் எப்படி இறங்குவது? இப்போது இருக்கும் நிலையே போதும் என்று தான் பெரும்பாலானவர்கள் ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள் அடங்கி விடுகிறார்கள். தெரியாததை செய்வது என்பது அவர்கள் வரையில் ரிஸ்க் எடுப்பதுபோல "நாங்கள் ரிஸ்க் எடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை" என்று இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுகிறார்கள்.
எல்லாவற்றிலும் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க வேண்டும் எனும் மனநிலை உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டு போவதில்லை. இதுவே உங்களுக்கு முட்டுக்கட்டையாக விடும் மனோபாவம் ஆகிவிடும். புதிதாய் ஒன்றில் இறங்குவதால் இருக்கிற பொருளை இழந்து விடுவோம் என்ற அச்சம், புதியதான பாதை சிக்கலாக, கடினமாக இருக்குமோ என்ற பஎச்சரிக்கை உணர்வு. இப்படி ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு பல சாக்கு போக்குகளை உருவாக்கிக் கொண்டு முடங்கி கிடப்பவர்கள் நிறைய பேர்.
இதில் அவர்களின் திறமை அவர்களுக்கே தெரியவில்லை என்பதும் ஒரு வேதனையான விஷயம். ஏனெனில் எந்த ஒரு செயலிலும் இறங்கிப் பார்த்தால்தான் நம்முடைய பலம் என்ன என்பது புரியவரும்.
ரிஸ்க் எடுப்பவர்களை பாருங்கள் "நான் எதற்காக காத்திருக்க வேண்டும் இப்போது எனக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது, எனது மனதில் இதை செய்ய வேண்டும் என்ற தைரியமும் துணிவும் பொங்கி வருகிறது. இப்போதே நான் எனக்கான இந்த பாதையில் இறங்கி ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன், வரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்" என்று உடனடியாக முடிவு எடுத்து அவர்கள் இறங்க நினைக்கும் துறையில் இறங்கி இறங்குவார்கள்.
எப்போதும் ரிஸ்க்கும் வாய்ப்பும் ஒன்றாகவே வருகிறது. நீங்கள் வாய்ப்பை பயன்படுத்துகிற போதுதான் ரிஸ்க் என்பதன் அர்த்தம் அங்கே முழுமையாகிறது. இடர்பாடுகளை துணிந்து ஏற்கும் எவரும் ஆபத்து என்று தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் அதில் இறங்கி அந்த ஆபத்துக்களை சரியான முன்னெச்சரிக்கையுடன் தவிர்த்து முன்னேறுபவர்களுமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைகளை அடைகிறார்கள்.
புதிதான ஒரு அணுகுமுறையை தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் ரிஸ்க் என்பது இருக்கவே செய்யும். ஆனால் பெரிய தொழிலதிபர்களை பாருங்கள். அவர்களால் மட்டும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல தொழில்களை செய்ய முடிகிறது? உதாரணமாக டாட்டா குழுமத்தை எடுத்துக் கொள்வோம்.
தேயிலை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கார் தயாரிப்பு என்று பல தொழில்களை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் துணிந்து எடுக்கும் ரிஸ்கும் நிர்வாகத்திறனும்.
ரிஸ்க் எடுப்பதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது என்பதையும் நாம் உணர்ந்து தகுதியான விஷயத்தில் தயங்காமல் ரிஸ்க் எடுத்தால் நாமும் வெற்றியாளரே.