பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்ற உடனே நம் அனைவரின் நினைவுக்கும் வரும் விஷயங்களில் முக்கியமானது அங்கே காணப்படும் போக்குவரத்து நெரிசல். குறிப்பாக பீக அவர்களில் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெங்களூரு மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது என்றாலே அச்சச்சோ டிராபிக்ல மாட்டிப்போமே என்ற எண்ணம் தான் தோன்றும்.
அவ்வப்போது பெங்களூரு மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை குறிப்பிடும் வகையினான பதிவுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அப்படி மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை அன்று பெங்களூரு நகரின் பிரதான சாலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது பெங்களூரு வாசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பெங்களூருவில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்ற ஒரு பகுதி தான் அவுட்டர் ரிங் சாலை. இந்த பகுதியில் தான் பல்வேறு பெரிய பெரிய ஐடி நிறுவனங்களின் அலுவலகங்களும் அமைந்து இருக்கின்றன. எனவே காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளை கடந்து செல்வது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு வாசி ஒருவர் மார்ச் 14ஆம் தேதியான ஹோலி பண்டிகை அன்று பெங்களூரு அவுட்டர் ரிங் சாலை வெறிச்சோடி காணப்படும் புகைப்படத்தை எடுத்து பதிவு செய்துள்ளார். அத்துடன் கூகுள் மேப்ஸில் இந்த சாலையில் தற்போது எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லை எளிதாக கடந்து சென்றுவிடலாம் என்பதை காட்டும் ப்ளூ லைனையும் அவர் பதிவிட்டுள்ளார் .

தன்னுடைய இந்த புகைப்படத்துடன் அந்த நபர் இன்று ஹோலி நம்ம பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையில் டிராபிக்கிற்கு இன்று ஹாலிடே (Today's Holi, Namma Bengaluru ORR traffic has taken a Holi-Day) வழங்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது . ஒரு பயனர் இதுபோன்ற சமயத்தில் நாம் 20 கிலோ மீட்டர் தொலைவை கூட 35 நிமிடங்களில் கடந்து விடலாம். ஆனால் வழக்கமான நாட்களில் ஒரு கிலோ மீட்டரை கடக்கவே 35 நிமிடங்கள் தேவைப்படும் எனக் கூறியுள்ளார்.
ஒரு பயனர் பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனைக்கு சாலை உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துவதே தீர்வாகும் என்று கூறியுள்ளார். பெங்களூருவின் மெட்ரோ ப்ளூ லைன் பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து பிரச்சனை சற்றே குறையும் என கூறியுள்ளார். பலரும் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.