முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்:

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம், “ பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பெற்று, உழவர்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் 2025-26 வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். அவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திடும் வகையில், தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தின் பலன்கள்

முதலமைச்சரின் மருந்தகம் போலவே, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுன்ம். அதோடு, நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் உற்பத்தி விளைபொருட்களை மதிப்பு கூட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மானிய உதவி

ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்களை அமைத்திட 30 சதவிகிதம் மானியம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 42 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.