தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“மும்மொழிக்கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி தருவோம். இல்லையேல் சட்டத்தில் இடமில்லை. தாய் மொழியை முக்கிய அம்சமாக வைத்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தமிழ்நாட்டிற்கு என்ன பிரச்சினை? மொழியை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடக்கிறது.

இந்தி படிக்க வேண்டும் என்று எங்கேயும் பாஜக சொல்லவில்லை. மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை படிக்க வேண்டும் என்றுதான் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி” என தெரிவித்திருந்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவை தவிர மற்ற கட்சிகள் மத்திய அமைச்சரின் கருத்தை சாடி வருகின்றன.

இதையடுத்து திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் இணைந்து சென்னையில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம், அஞ்சமாட்டோம். இது ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கு புரிய வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுத்துள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் மிரட்டுகிறார்.

உங்க அப்பன் வீட்டு காச கேக்கல. பிச்சை கேக்கல. கடன் கேட்கவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோர் கட்டிய வரிப்பணத்தைதான் கேட்கிறோம். உங்கள் மிரட்டலுக்கு தமிழ்நாடு அஞ்சாது.

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது. இங்கு இருமொழிக் கொள்கைதான். எங்களை மீண்டும் மீண்டும் மிரட்டி பார்க்க வேண்டாம்.

பிரதமர் மோடி அவர்களே நீங்கள் சென்ற முறை எங்களின் உரிமைகளை பறித்தபோது தமிழ்நாட்டு மக்கள் உங்களை கோ பேக் மோடி என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். இதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால் இந்தமுறை கோ பேக் மோடி கிடையாது. கெட் அவுட் மோடி என்று சொல்லி உங்களை விரட்டியடிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது “உதயநிதி சொல்கிறார். மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்வாராம். உதயநிதிக்கு சொல்கிறேன். நீ சரியான ஆளா இருந்தா சொல்லி பாரு. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு. எங்க அப்பா முதலமைச்சர். என் தாத்தா 5 முறை முதலமைச்சர். நீ சொல்லிப் பாரு. உன் வாயில் இருந்து எங்க உலகத் தலைவர் மோடியை சொல்லி பாரு. உன் அப்பா சிட்டிங் முதலமைச்சர், நீ துணை முதலமைச்சர். சொல்லி பாரு.

இரண்டு நாட்களுக்கு முன்னாடி என்ன சொன்ன? கெட் அவுட் மோடின்னு சொல்வாராம். வெளிய போடா மோடின்னு சொல்வாராம். உனக்கு ஒரு உலகத்தலைவரை மதிக்கத் தெரியல. நீ கத்துக்குட்டி. காலைல 11 மணிக்குத்தான் உன் மேல் வெயிலே படும். நீ சூரியனை காலைல பார்த்ததே கிடையாது.

உச்சிக்கு வந்ததுக்கு அப்புறம்தான் பார்ப்ப. 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோக பண்ணிட்டு ஃபைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி பண்ற ஆளிடம் 11.30 மணிக்கு எழுந்திருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா சாதாரண நடுத்தர மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

அன்பில் மகேஷுக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கு. இதே ஊரில் 20 வயது வரை நான் கழிப்பறையை பார்த்தது கிடையாது. பள்ளி போகும்போது காலையிலேயே ஆட்டுப்புளுக்கையை அள்ளி கொட்டிட்டு மாட்டு சாணத்தை அள்ளி வீசிவிட்டு சைக்கிளில் சென்று நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி பள்ளிப்படிப்பை படித்தவன் நான்.

பந்தா பன்ற வேலைலாம் என்கிட்ட வேண்டாம். சாதாரண மக்களோடு இருந்து வந்தவன் நான். மோடி என் கையை பிடித்து குலுக்குறார் என்றால் அது என் கல்விக்காக மட்டும்தான். உங்களுடைய பிள்ளைக்கும் அது கிடைக்க வேண்டும். வேற ஒரு வெங்காயமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.