ARTICLE AD BOX
மல்டி மில்லியனர் சரத்குமாரின் மகள் நிலாவுடனான (அனிகா சுரேந்திரன்) தீராக்காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுவுக்கு (பவிஷ் நாராயண்) திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ‘ஆடுகளம்’ நரேன், சரண்யா பொன்வண்ணன் ஒரு பெண்ணைப் பார்க்கின்றனர். அப்பெண், பவிஷ் நாராயணுடன் படித்த பிரியா பிரகாஷ் வாரியர். திருமணத்துக்கு முன்பு அவர்கள் பேசிப்பழகி புரிந்துகொள்ள முயற்சிக்க பெற்றோர்கள் சம்மதிக்கின்றனர். அப்போது பவிஷ் நாராயணுக்கு முன்னாள் காதலி அனிகா சுரேந்திரனின் திருமண அழைப்பிதழ் வருகிறது. தனது காதல் மற்றும் ககாதல் தோல்வி குறித்து பிரியா பிரகாஷ் வாரியரிடம் பவிஷ் நாராயண் சொல்கிறார்.
சரத்குமாருக்கு தன்னைப் பிடிக்காததையும், அனிகா சுரேந்திரனின் சந்தோஷத்துக்காக அவரை வெறுத்து ஒதுக்கியதையும், அதனால் தங்கள் காதல் பிரேக்அப் ஆனதையும் விவரிக்கிறார். அதைக்கேட்ட பிரியா பிரகாஷ் வாரியர், கோவாவில் நடக்கும் அனிகா சுரேந்திரனின் திருமணத்துக்குச் சென்று வரும்படி அனுமதிக்கிறார். இதையடுத்து கோவாவுக்குச் சென்ற பவிஷ் நாராயண், தனது காதலுக்கு நிரந்தர முடிவு கட்டினாரா? அல்லது உடைந்த காதலை மீண்டும் ஒட்ட வைத்தாரா என்பது யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
இது வழக்கமான காதல் கதை என்று இயக்குனர் தனுஷ் சொல்லிவிட்டாலும், ஆழமான காதலை கடைசிவரை அழுத்தமாகவும், அழகாகவும் சொல்லியிருக்கிறார். அதிரடி திருப்பங்கள், சஸ்பென்ஸ், டபுள் மீனிங் டயலாக்குகள், ரத்தம், வன்முறை எதுவும் கிடையாது. தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். படம் முழுக்க இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். பாடிலாங்குவேஜில், தனுஷின் சாயலை அவரால் தவிர்க்க முடியவில்லை என்றாலும், ஒருகட்டத்தில் அதுவே சுவாரஸ்யத்தை அதிகரிக்க காரணமாகிறது. அவரது நண்பராக வரும் மேத்யூ தாமஸ், படம் முழுவதும் கலகலக்க வைக்கிறார்.
சரத்குமாரின் ஜீவனுள்ள நடிப்பு குறிப்பிடத்தக்கது. அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்டேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்தா சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு பிரியங்கா அருள் மோகனும், இன்னொரு பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரும் கேமியோ ரோலில் வந்து கவனத்தை ஈர்க்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஏற்கனவே ஹிட்டான பாடல்கள், இப்படத்தை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன. அவரது துள்ளலான பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது. லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ரகம். ஆர்ட் டைரக்டர் ஜாக்கியின் கைவண்ணமும், ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் சிறப்பு. 2வது பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளார், இயக்குனர் தனுஷ். எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்தால், இளமைத்துள்ளலான காதல் கதையை ரசிக்கலாம், சிரிக்கலாம்.