ARTICLE AD BOX
மும்பை: விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் பார்ப்பதற்கு வெளிநாட்டை சேர்ந்தவர் போல் இருப்பார். இதனால் அமெரிக்கா ஏர்போர்ட்டில் இவர் கைதாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து நீல் நிதின் முகேஷ் கூறியது: நான் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு படத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நியூயார்க் விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்கள். நான் என் இந்திய பாஸ்போர்ட்டைக் காண்பித்தேன்.
அப்போதும் அவர்கள் அதை நம்பவே இல்லை. நீ இந்தியன் போல் இல்லை என்றார்கள். என்னைக் கேள்விக்கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நான் பதிலளிக்க அனுமதிக்கப்படவே இல்லை. என்னைக் கைது செய்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரித்தார்கள். ஒருகட்டத்தில் என்னைக் குறித்து கூகுளில் தேடும்படிக் கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் தவறை உணரத் தொடங்கினார்கள். அதன்பிறகு என் அப்பா, என் தாத்தா குறித்தெல்லாம் கேட்டுவிட்டு அதை உறுதி செய்த பிறகுதான் விடுவித்தார்கள் என்றார்.