நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு

13 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் கல்வி தரம் கொரோனாவுக்குப் பிறகு பின் தங்கி உள்ளதாக சுட்டிக்காட்டி பேசினார். குறிப்பாக மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை என்று பேசினார்.

இதற்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை குறித்தும் குறைகூறி பேசியதாக கூறி, அம்மாநில எம்.பி.க்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, "ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. நேற்று, கல்வி மந்திரி அந்த அவமானத்தை ஏற்படுத்தினார். இன்று நிதி மந்திரி தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டிற்கு திட்டங்களை வழங்குவதன் மூலம் ஏதோ தொண்டு செய்வது போல் காட்டுகிறார்கள். பா.ஜ.க. அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது" என்று அவர் கூறினார்.

நிதிமந்திரியின் பதிலுக்கு எதிராக மக்களவையில் இந்திய கூட்டணித் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில், "நிதிமந்திரி தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டை மோசமாகக் காட்ட முயன்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அவதூறு செய்ய மத்திய மந்திரிகள் பலமுறை முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன" என்று அவர் கூறினார்.


Read Entire Article