ARTICLE AD BOX
கர்நாடகாவில், இஸ்ரேலிய பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதானவர்களின் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 27 வயது பெண் உட்பட 4 பேர், ஹம்பியிலுள்ள விடுதி பெண் மேலாளருடன் கடந்த வியாழக்கிழமை இரவு, ஹம்பியில் உள்ள சநாபூர் ஏரியை பார்வையிடச்சென்றனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பலால், இஸ்ரேலிய பெண்ணும், அவருடன் சென்றிருந்த விடுதி பெண் மேலாளரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
இது, கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தினக்கூலி தொழிலாளர்களான கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபரான ஷரனா பசவாவை சென்னையில் கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. பகலில் தினசரி ஊதியம் பெறும் தொழிலாளிகளாக பொதுவெளியில் தங்களைக் அடையாளப்படுத்திக்கொண்ட இவர்கள், இரவில் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஹம்பியில் சம்பவத்தன்று மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது இஸ்ரேலிய பெண் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுடன் வந்திருந்த விடுதி பெண் மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரையும், இஸ்ரேல் நாட்டுப் பெண்ணையும் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததும் காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.