ARTICLE AD BOX
அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறாா். அமெரிக்கப் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தாா். இந்த நடைமுறை ஏப்.2 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்று கடந்த 8-ஆம் தேதி திரும்பிய நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
வர்த்தக பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்காவிற்கு வழங்கப்படக்கூடிய கட்டணச் சலுகைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை ஆட்டோமொபைல், தோல், ஜவுளி, மின்னணுவியல் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ''தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம்'' தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் மக்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறியது:
இந்தியா-அமெரிக்கா இடையே சந்தை அணுகலை அதிகரிக்கவும், இறக்குமதி வரி மற்றும் வரிகள் அல்லாத தடைகளை குறைக்கவும், விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பலனடைகின்ற வகையில் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பரஸ்பர வரிகளின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாதா, அமெரிக்கா இன்னும் இந்தியா மீது பரஸ்பர வரிகளை அமல்படுத்தவில்லை என்றும், இரு நாடுகளும் சந்தை அணுகலை அதிகரிப்பது, வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வர்த்தக வரிகள் குறித்து இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் திங்களன்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.