ARTICLE AD BOX
இரவு நேரங்களில் சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயந்துகொண்டேதான் தனியாக வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.
வழிப்பறி பயம், ரவுடிகளின் அட்டகாசம், போலிஸின் சந்தேக விசாரணை, படுவேகத்தில் வரும் வாகனங்கள் என்பன எல்லாவற்றையும்விட, நாய்த் தொல்லைதான் முக்கிய காரணம்.
இப்போது நகரின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாத் தெருக்களிலுமே இந்த நாய்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. வெறுமே குரைத்துவிட்டு விட்டாலும் பரவாயில்லை, ஆனால் துரத்திக்கொண்டு வரும். அச்சுறுத்தல், கடித்துவிடுமோ என்ற பயம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த பயத்துடனேயே வீடு திரும்புகின்றனர்.
நகர வீதிகளில் திரியும் இந்த நாய்களுக்கு இனப்பெருக்கத்தைத் தவிர வேறு எந்தப் பணியும் இல்லை. பொதுவாக கார்த்திகை மாதத்தில்தான் தெரு நாய்கள் இனப்பெருக்கத்திற்கு முற்படும். ஆனால், இப்போதோ அவற்றிற்கு மாதம், காலம் என்று எந்தக் கணக்கும் இல்லை போலிருக்கிறது. வருடம் பூராவும் குட்டிபோட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. எல்லாமும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து மனிதர்களை பயமுறுத்தி விரட்டிக்கொண்டிருகின்றன.
எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த நாய்கள் மீது பரிதாபப்பட்டு அவற்றுக்கு பிஸ்கட் போன்ற ஏதேனும் உணவுவகைகளைக் கொடுத்து தம் இரக்கத்தைக் காட்டிக்கொண்டார். ஆனால், ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை. பத்து, இருபது என்ற எண்ணிக்கையில் அந்த நாய்கள் அவரை நோக்கிப் படையெடுத்தால் அவர் என்னதான் செய்வார்? அவருடைய இயலாமையைப் புரிந்து கொள்ளாமல், தம்முடையை பசிக்கு வழக்கமாக உணவு தந்து கொண்டிருந்த அவர், இப்போது வெறும் கையை ஆட்டிவிட்டுப் போவதைப் பார்த்து கோபம் கொள்கின்றன. அவர் தருவார் என்ற நம்பிக்கையில் அவரைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. பாசத்துடன் அவர்மீது தாவுகின்றன. சிலசமயம், தம் நகங்களைப் பூனைபோல உள்ளிழுத்துக்கொள்ள முடியாத பலவீனத்தில் அவரைக் கீறியும் விடுகின்றன. அவரோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்தப் பகுதியைவிட்டு வேறு பகுதிக்குக் குடியேறிச் சென்றுவிட்டார்.
இரவு நேரங்களில் அவை போடும் கூச்சல், சண்டையால் முதியவர்களும் நோயாளிகளும் தமது வீடுகளில் நிம்மதியாகத் தூங்கவும் முடிவதில்லை.
இந்த நாய்களுக்கு வெறி பிடிக்கும் தன்மை உண்டாகுமானால் அது பொதுமக்களுக்குப் பேராபத்து என்ற பொதுச்சேவை காரணத்தால் தெரு நாய்களை சென்னை மாநகராட்சியினர் பிடித்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பீட்டா (PETA) போன்ற பிராணிகள் நல அமைப்பினர் அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் நாய்கள் கொடுமைபடுத்தப்படுகின்றன, சாகடிக்கப் படுகின்றன என்று ஜீவகாருண்ய அடிப்படையில் வாதிட்டதால், அந்தப் பணியைக் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, செஞ்சிலுவை சங்கத்தின் பிராணி நலன் பிரிவில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், மேற்கொண்டு பிடித்துச் செல்ல அவர்களும் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
சிலசமயம், நாய்கள் மனிதர்களை மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்கள், ஏன் கார்களைக்கூட துரத்திச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். இதற்கு அவற்றின் பாரம்பரிய குணாதிசயமே காரணம் என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள். ஆமாம், அந்த காலத்தில், அரசர்கள் முதல் அடுத்து வந்த ஜமீந்தார்கள்வரை காட்டுக்குள் வேட்டையாடச் செல்பவர்கள் தங்களுடன் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்களையும் உடனழைத்துச் செல்வார்கள். அவை தம் எஜமானருக்கு உதவும் வகையில் அவர் குறிப்பிட்டுக் காட்டும் விலங்கை விரட்டிச் செல்லும். அதன் கழுத்தைக் கவ்விப் பிடிக்கும். எஜமானர் அதைச் சுட்டுத் தள்ள உதவும். அதே ஜீன், அதாவது மரபணு, இன்றளவும் நாய்க்குள் உயிரோட்டமாக இருப்பதால்தான் இப்போது அதன் கண்களுக்கு விலங்குகளாகத் தெரியும் டூவீலர், கார்களையும் துரத்துகிறது போலிருக்கிறது!
தெருவில் திரியும் கால்நடைகளைப் பிடித்துச் செல்லும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது. இவற்றோடு நாய்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு போனால் நகர மக்கள் நிம்மதியாக அடைவார்கள்.