ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள். இவர் நாம் தமிழர் சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை எம்.பி வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டவர். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்கட்சியில் இணைந்த அவர், ஆறு வருடங்களாகப் பயணித்து வருகிறார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருந்தன. இதனை சுட்டிக்காட்டி சீமானும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது என காளியம்மாள் முடிவெடுத்துவிட்டதாகவும், அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இது தொடர்பாக காளியம்மாளிடம் கேட்டபோது, தனது நிலைப்பாடு குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக,நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.