ARTICLE AD BOX
நம் எண்ணங்கள் டைப்ரைட்டரில் அச்சடிக்கப்பட்டு எழுத்துக் கோர்வையாக மனதில் தோன்றுவதில்லை. எண்ணங்கள் படங்களாக விரிகின்றன. டைப்ரைட்டர் என்று படிக்கும்போது நமது மனம் சட்டென்று அதன் உருவத்தை அத்துடன் தொடர்பு கொண்டுள்ள மேஜை அலுவலகம் போன்றவற்றைதான் உடனடியாக படமாகக் காண்கிறது.
புதிய கட்டடம் கட்டுமுன் அதன் அளவுகளை கட்டட நிபுணர்கள் படம் வரைகிறார்கள். கட்டட அமைப்பு நிபுணர்களின் கற்பனையில் உருவாகிறது. எழுத்தாளர்களைக் கேட்டால் அவர்கள் கற்பனையில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் பேசுவதையும், பாடுவதையும் கதை கதையாய் கூறுவார்கள்.
பாரதியின் தீர்க்க தரிசனம் பற்றி பேசுகிறோம். விடுதலை வருமுன் தம் கற்பனையில் பட்டொளி வீசி பறக்கும் கொடியினை யும், கம்பத்தின் கீழ் நிற்கும் வீரர்ளையும் அவன் கண்டான். இன்று நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒரு காலத்தில் யாரோ ஒருவர் மனதில் கற்பனையாய் இருந்து உண்மை வடிவம் பெற்றன.
மகத்தான விஞ்ஞானி எடிசன் "நான் எதையும் வார்த்தைகளாகச் சிந்திப்பதில்லை. எல்லாவற்றையும் படமாகத்தான் பார்க்கிறேன்" என்றார். கற்பனைதான் உலகை ஆள்கிறது என்றான் நெப்போலியன். இரவு பூராவும் உட்கார்ந்து பிரெஞ்சு நாட்டு படத்தை வைத்துக்கொண்டு துருப்புக்களை அங்கும் இங்கும் நகர்த்திக் கொண்டிருப்பானாம் நெப்போலியன்.
அவனது கற்பனகளே பின்னால் சரித்திரமாக மாறியது. ஹென்றிகெய்சர் என்ற அமெரிக்க தொழிலதிபர் "உன் எதிர்காலத்தை நீ கற்பனை செய்து கொள்ளலாம்" என்றான். நம்மில் பலருக்குக் கற்பனையைப் பற்றிய உண்மை தெரியாது.
நம்மில் பலருக்கு ஒரு படத்தைக்கூட கற்பனையில் நிரந்தரமாக வைக்க முடிவதில்லை. மனதில் எண்ணங்கள் குரங்குபோல் தாவிக்கொண்டேயிருக்கும். ஒருமுகப்படுத்தாத மனம், நெறிப்படுத்தாத மனம் எதையும் சிந்திப்பதில்லை. நாம் ஆண்டவனிடம் வேண்டும்போது திரும்பத் திரும்ப நம் வேண்டுகோளை கூறுவோம்.இது திரும்பத் திரும்ப நம் கற்பனையில் காணும்போது ஆழ்மனதில் பதிகிறது.
ஆழ்மனதில் நாம் இதுவரை அனுபவித்த உணர்ச்சிகள் எல்லாம் படமாகப் பதிந்திருக்கின்றன. டாக்டர் பெனீஃபீல்டினா ஆராய்ச்சி சில விஷயங்களைப் தெளிவுபடுத்துகிறது. வலிப்பு வந்த சிலரை பென் ஃபீல்டு குணப்படுத்த மூளை அறுவை சிகிச்சை செய்தார். மூளை மட்டும் மரத்துப்போக ஊசிபோட்டு சிகிச்சை செய்தார். பிறகு நினைவு திரும்ப டாக்டர் லேசான மின்துருவங்களால் மூளையின் வலது முன் பகுதியைத் தொட்டார். உடனே சிகிச்சை பெறுபவர் யாரோ பியானோ இசைக்கிறார்கள் என்னால் அப்பாட்டைக் கேட்க முடிகிறது என்றாராம்.
டாக்டர் பென் ஃபீல்டு சுமார் 15வருடங்கள் இத்துறையில் சோதனை செய்தார். "நாம் அனுபவித்த அத்தனை உணர்ச்சிகளும் மனதில் சம்பவங்களாக பதிந்திருக்கின்றன. ஒரு டேப் ரிகார்டைப் போன்று நாம் அதைப் போட்டுக் கேட்க முடியும் ஒவ்வொரு சம்பவமும் தனித்தனியே வெளிவருகிறது. எல்லாம் சேர்ந்து குழப்பமாக வருவதில்லை. மூளையில் பல பகுதிகளில் சம்பவங்கள் உணர்ச்சிகள் பதிந்து கிடக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
நம் ஆசைகள் மனதில் கற்பனைகளாக, படங்களாக விரிகின்றன என்பதைக் கண்டோம். டாக்டர் பென் ஃபீல்ட் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆழ்மனதில் பதிந்திருக்கின்றன என்றும் அவை மீண்டும் நினைவுக்கு வரும்போது பழைய நிகழ்ச்சிகளை அனுபவிக்கிறோம். ஆழ்மனதிலிருக்கும் பழைய நினைவுகளுக்கு சாதனைக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.