ARTICLE AD BOX
மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் அறிவித்துள்ளார். தமிழகம் புறக்கணிக்கப்படுவதால் கட்சியில் இயங்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ரஞ்சனா நாச்சியாராகிய நான் அக்கட்சியில் இருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.

தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன். தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது.

என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு கட்சியில் இயங்க முடியவில்லை. இதுவரை பாஜகவில் வழங்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் சிறப்பாகத்தான் நான் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது. பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம். அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது.

எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டேன். எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரி தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன், நன்றியை நவில்கிறேன். என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில்புரட்சிப் பயணம். அது எழுச்சிப் பயணம். வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம் என தெரிவித்துள்ளார்.

இவர் சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.