ARTICLE AD BOX
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ்வக் சென். ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றும் 2.2 லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் அதிகாலை 5 மணி அளவில் மூன்று மாடி கொண்ட அவரது வீட்டில் அவரது சகோதரி வான்மை தங்கியிருக்கும் மூன்றாவது மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன், நகையையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து கண் விழித்த வான்மை வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் அலங்கோலமாக கிடப்பதை பார்த்தார். அதன் பிறகு நகையும் பணமும் களவு போய் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது விஷ்வக் சென்னின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் கிடைத்த கைரேகைகளையும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.