ARTICLE AD BOX
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாதக, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக தோழமைக் கட்சிகள், அதிமுக, பாமக, தேமுதிக, தவெக, ஐஜேகே உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றன. திராவிடர் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கழகத்தின் தலைவர் வீரமணியும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பைப் பொதுவாக மக்கள் தொகையின் அடிப்படையில்தான் செய்வார்கள். இதனால் தொகுதி மறுசீரமைப்பில், மக்கள்தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்குமெனச் சொல்கிறார்கள்.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாசாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் 12 தொகுதிகளை இலக்க நேரிடும். அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் அரசியல் உரிமைகள் மீதான நேரடித்தாக்குதல்” எனத் தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது என தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
முதலமைச்சர் உரையாற்றி முடித்ததும் பிறக் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதலமைச்சர் மற்ற தென்மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முழு ஆதரவு தெரிவிக்கும்,. 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்னை அல்ல அது ஒரு மாநிலத்தின் பிரச்னை என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முடித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை போலவே தொகுதிகளின் எல்லை வரையறையும் மிக முக்கியமானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறும்பான்மையின மக்களது வாக்குகளை சிதறடிக்கும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி, வரும்காலங்களில் இதுபோன்ற எல்லை மறுசீரமைப்பு கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.