தொகுதி மறு சீரமைப்பு அனைத்து கட்சி கூட்டம்.! அதிமுக, தவெக நிலைப்பாடு என்ன.?

12 hours ago
ARTICLE AD BOX

அனைத்துக்கட்சி கூட்டம்: தொகுதி மறு சீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்பட்டு உரிமைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு சார்பாக அனைத்துக்கட்சி கூட்டமானது இன்று சென்னையில் தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை வரவேற்று அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில்,

தவெக நிலைப்பாடு என்ன.?

தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என தெரிவித்தார். இது மத்திய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என கூறினார். முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் 1976 இல் இருந்து 2001 வரை தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். 

அதேபோல. 84ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம், முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அப்போது அவர் சொன்ன காரணம். வட இந்தியாவை விடத் தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என தெரிவித்து இருந்தார். எனவே அந்தக் காரணம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது என கூறினார். எனவே, தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும் என ஆனந்த் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்- அதிமுக

அதிமுக சார்பாக கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதி ஒதுக்கிய பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதி மறு வரையறை செய்யும் பணி தொடங்கும் என்ற நிலையில் தற்போது எதற்காக இந்த அவசர கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினார். தமிழக அரசு தற்போது கூட்டியுள்ள இந்த அனைத்து கட்சி கூட்டம் என்பது ஒரு நாடகம் என்றும் விமர்சித்தார்.  தமிழகத்தின் உரிமையை திமுக தான் தாங்குகிறது என்பது போல ஒரு மாயையை உருவாக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக அரசு கூட்டி இருப்பதாகவும்குற்றம் சாட்டினார். 

உரிமைகளை விட்டுக்கொடுத்த திமுக அரசு

தமிழகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் திமுக அரசு பறிகொடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், கச்சத்தீவு விவகாரம் முதல், நீட் தேர்வு வரை அனைத்து உரிமைகளையும் திமுக அரசு மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் தற்போதைய பிரதிநிதித்துவம் விகிதாச்சாரமான 7.18 விழுக்காடு என்பதற்கு குறையாமலும்,

தற்போது உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாமலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படி நிர்ணயம் செய்தால் தான் மக்கள் தொகையை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற முடிவை முன் வைத்ததாக தெரிவித்தார்.

Read Entire Article