ARTICLE AD BOX
மாணவ மாணவியர் செல்வங்களே!
ஹயக்ரீவர் பெருமாளின் அவதாரம். இவர் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கே குரு. இந்த ஹயக்ரீவருக்கு சிறப்பு சன்னதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹயக்ரீவர் லட்சுமியுடன் காட்சி தருகின்றார் வடக்கு பார்த்த திருக்கோலம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் இவரை வேண்டிக் கொள்ள வெற்றி நிச்சயம். ஹயக்ரீவரை பிரதி வெள்ளிக்கிழமை வணங்குவது சிறப்பு.
வைணவ மகா புருஷனை ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிருக்கு நேரில் தரிசனம் அளித்து அனைத்து வேதங்களையும் அளித்து அருளிய ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி சென்னையையடுத்து செட்டி புண்ணியம் என்ற திருத்தலத்திலும், கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் திருத்தலத்திலும் எழுந்தருளி இருக்கிறார் இவரை தரிசித்து தினமும் வீட்டில் படம் வைத்து பூஜித்து வர கை மேல் பலன் தெரியும். மாணவ, மாணவியர் காலையில் நீராடி ஹயக்ரீவர் ஸ்லோகத்தை ஜெபித்து வந்தால் தேர்வில் வெற்றி பெறுவதுடன் அதிக மதிப்பெண்களையும் பெறலாம்.
சரஸ்வதிக்கு என தனி கோவில் கூத்தனூரில் உள்ளது. இங்கு சரஸ்வதி தேவி கையில் வீணையுடன் புத்தகத்தோடு காட்சி தருவது தனி சிறப்பாகும். இங்குள்ள சரஸ்வதியை பூஜை வழிபாடு செய்து வணங்க கல்வி அறிவு பெருகும் என்பதில் ஐயமில்லை. ஒட்டக்கூத்தர் பாடும் திறமையை பெற்றது இந்த தலத்தில் தான்.
திருவாரூரில் குளத்தின் கரையில் உள்ளது இங்க் பிள்ளையார். இந்த பிள்ளையார்க்கு இங்க்கில் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பரீட்சை எழுதி முடித்த மாணவர்கள் மீதமுள்ள இங்க்கை இந்த தலத்தில் விநாயகர் மீது அபிஷேகம் செய்ய பரீட்சையில் வெற்றி நிச்சயம் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை.
திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் நவகிரகத்தில் புதன் பகவான் வித்தியாசமாக வடக்கு திசையில் அமர்ந்து இருப்பதால் ஜாதகத்தில் புதனால் ஏற்படுகின்ற படிப்பு குறைபாடு நீக்கும் தலமாக விளங்குகிறது. அதனால் இவரை புதன்கிழமை தோறும் வழிபடுவதால் கல்வியில் இருந்த குறைபாடுகள் நீங்கி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
புதன்கிழமை தோறும் பாசிப்பயிறை வேகவைத்து மதுரை மீனாட்சி அல்லது புதனை நினைத்து வணங்கி சாப்பிட மாணவர்கள் எளிதில் பரீட்சையில் வெற்றி பெறுவார்கள்.
கலைவாணியை புதன்கிழமைதோறும் வெள்ளை தாமரை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை வில்வ அர்ச்சனை செய்தால் கல்வி ஞானம் கிட்டும்.
புதன்கிழமை தோஷம் புதன் காயத்ரியை படிக்க கல்வி ஞானம் கிட்டும்.
நான்முக பிரம்மன் சரஸ்வதி தேவியை படைத்தார். அந்த சரஸ்வதி தேவிக்கு ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி அனைத்து வித்தைகளையும் கல்வி அட்சர மாலையாக்கி தந்தருளினார். அதுவே சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் உள்ள அட்சர மாலையாகும். அட்சரம் என்றால் எழுத்து என்று பொருள். அ, ஆ, இ, ஈ மற்றும் 1, 2, 3, 4 போன்றவை அட்சரங்கள் ஆகும். அப்படிப்பட்ட சரஸ்வதி தேவியை தினந்தோறும் மந்திரம் சொல்லி பூஜித்து வர சிறப்பான தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்களை அள்ளலாம்.
ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்:
ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே
ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்திரம்:
யாகுந் தேந்து துஷாரஹார தவளா யாசுப்ர வஸ்த்ராவ்ருதா
யாப்ரஹ்மாச்யுதா சங்கர ப்ரம்ருதிரி தேவைஸ்ஸதா பூஜிதா
ஸாமாம்பாது சரஸ்வதி பகவதீ திச்சேஷ ஜாட்யாபஹா
புதன் ஸ்தோத்திரம்:
ப்ரியங்கு கலிகா ச்யாமம்
ரூபேணாப்ரதி மம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோ பேதம்
தம் புதம் ப்ரணமாம்யஹம்
இந்த மூன்று ஸ்தோத்திரங்களையும் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு ஹயக்ரீவர், சரஸ்வதி, புதன் பகவான் மூன்று பேரையும் மனதார தியானித்து ஸ்லோகங்களை கூறி வர தேர்வில் அதிக மதிப்பெண்களும், வெற்றியும் நிச்சயம்.
கல்வியில் மேன்மை பெற வழிபடும் தலங்கள் பற்றி வேத விற்பன்னர் கூறியது.