ARTICLE AD BOX
புதுடெல்லி,
இந்தியாவின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஷ்வர் குமார் பெயரை அறிவித்திருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்வரை, தேர்தல் ஆணையர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய மந்திரி அடங்கிய தேர்வுக்குழு, தேர்தல்ஆணையர்களை தேர்வு செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அந்த சட்டத்தின்படி, கடந்த ஆண்டு 2 தேர்தல் ஆணையர்களும், கடந்த 17-ந் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்றும், அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்குரும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீது கடந்த 12-ந் தேதி நடந்த விசாரணையை தொடர்ந்து, 19-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் வக்கீல் பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியதன் பேரில், தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கை முன்னுரிமை கொடுத்து விசாரிப்பதாக நீதிபதிகள் நேற்று முன்தினம் உறுதி அளித்தனர். இந்நிலையில், நேற்று நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேரமின்மை காரணமாக, ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியது. ஹோலி பண்டிகைக்கு முன்பு விசாரிக்க வேண்டிய வழக்குகள் நிறைய இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
அதற்கு வக்கீல் பிரசாந்த் பூஷண் கூறுகையில், "அவசரமாக விசாரிக்க வேண்டிய முக்கியமான வழக்கு. தேர்தல் ஆணையர்களை 2023-ம் ஆண்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நியமிக்க வேண்டுமா அல்லது 2023-ம் ஆண்டின் சட்டப்படி நியமிக்க வேண்டுமா என்ற சிறிய சட்ட கேள்வி சம்பந்தப்பட்டது. வக்கீல்கள் ஒரு மணி நேரத்துக்குள் வாதங்களை முடித்து விடுவார்கள். வரும் வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் கூட விசாரிக்கலாம்" என்று அவர் கூறினார்.
ஜெயா தாக்குரின் வக்கீல் வரண் தாக்குரும், இது ஜனநாயகம் தழைப்பதற்கான முக்கியமான வழக்கு என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், எல்லா வழக்குகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது அல்ல என்று கூறினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.