ARTICLE AD BOX
சென்னை: நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல்தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு. இது மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல்.
தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக தென் மாநிலங்களின் இடங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதம் என குறையும் அபாயம் உள்ளது.
1973 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என தொகுதி மறுசீரமைப்பில் உள்ள முக்கிய பாதிப்புகளை பட்டியலிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.