ARTICLE AD BOX
தெலங்கானா-வுக்கு ஜாக்பாட்.. 45,000 கோடியை முதலீடு செய்யும் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்..!
தெலங்கானா: சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் 45 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. தெலங்கானா அரசுடன் இது தொடர்பாக சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி தெலங்கானா மாநிலத்தின் முழுகு மாவட்டத்தில் உள்ள நாகர்கர்னூல் பகுதியில் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய நீர் மின் ஆலை நிறுவப்பட இருக்கிறது. இந்த ஆலை மூலம் 7 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் 45, 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரக்கூடிய உலக பொருளாதார உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தெலங்கானா மாநில அரசு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கக்கூடிய நிறுவனங்களின் முதலீடுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தான் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நீர் மின் திட்டத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி குழாய்களில் தண்ணீரை சேமித்து அந்த நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்க இருக்கிறது.
குறிப்பாக பம்ப் ஸ்டோரேஜ் ஹைட்ரோபோவர் என்பது ஒரு வகையான நீர் மின் ஆற்றல் சேமிப்பு ஆகும். வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர் ஓட்டங்களை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து ஒரு டர்பைன் வழியாக தண்ணீரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வெளியேற்ற வேண்டும். அவ்வாறு வெளியேறும்போது இந்த பம்ப் ஸ்டோரேஜ் மின்சாரத்தை உருவாக்கும்.
இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் 3,400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல 5,440 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி சக்தி மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
உற்பத்தி துறையில் தொடங்கி சேவைத்துறை, விண்வெளி தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளிலிருந்தும் தெலங்கானா அரசு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தலைமையின் கீழ் தெலங்கானா மாநிலம் மிகச்சிறந்த முதலீட்டு மையமாக மாறி வருகிறது என சன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திலீப் சாங்வி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் மகாராஷ்ட்ரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வருகின்றனர்.
Story written by: Devika