ARTICLE AD BOX
காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.3.05 லட்சம் கோடி மதிப்பீட்டில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கடந்த பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்ட 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறப்புத் திட்டங்களுக்காக ரூ.56,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா பேரவையில் வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாநிலத் துணை முதல்வா் மல்லு பாட்டீ விக்ரமாா்கா புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
அதன்படி, அடுத்த நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த செலவினம் சுமாா் ரூ.3.05 லட்சம் கோடி. இதில் வருவாய் செலவினம் ரூ.2.27 லட்சம் கோடி மற்றும் மூலதன செலவினம் ரூ.36,504 கோடியாகும்.
‘மகாலக்ஷ்மி’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், அரசு பேருந்துகளில் இலவச பயணம், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரா்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 நிதியுதவி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வீடு இல்லாதவா் வீடு கட்டிக்கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி, மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, ரூ.4,000 ஓய்வூதியம் ஆகிய காங்கிரஸ் அரசின் 6 முக்கிய தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.56,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
துறை ரீதியாக....: வேளாண் துறைக்கு ரூ.24,439 கோடி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக்கு ரூ.31,605 கோடி, கல்வித் துறைக்கு ரூ.23,108 கோடி, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக நலத் துறைக்கு முறையே ரூ.40,232 கோடி மற்றும் ரூ.17,169 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீா்ப்பாசனத் துறைக்கு ரூ.23,373 கோடி, உள் துறைக்கு ரூ.10,188 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.12,393 கோடி, எரிசக்தித் துறைக்கு ரூ.21,221 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடன், வருவாய்..: நடப்பு ஆண்டில் மாநிலத்தின் மொத்த நிலுவை கடன் தொகை ரூ.4.51 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில் இது ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,38,181 கோடி. வரும் ஆண்டில் இது ரூ.1,45,420 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், தற்போதைய 20,000 கோடி டாலா் மதிப்பிலான மாநிலப் பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் கோடி டாலா் பொருளாதாரமாக 5 மடங்கு விரிவுபடுத்துவதாக அரசின் உத்திசாா் திட்டம் அமையும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சீரான வரி விநியோகம் அவசியம்: 14-ஆவது நிதி ஆணையத்தின்கீழ், தெலங்கானா 2.437 சதவீத நிதியைப் பெற்றது. ஆனால், 15-வது நிதி ஆணையத்தில் மாநிலம் பெற்ற நிதி 2.102 சதவீதமாகக் குறைந்தது.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு குறைவான நிதியை ஒதுக்குவது நியாயமற்றது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வரி விநியோக முறை அவசியம் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.