ARTICLE AD BOX
சோழநாட்டு தலைநகரான புகார் நகரின் நீதி தெய்வமாக விளங்கியது சதுக்க பூதம் என்றழைக்கப்படும் நாளாங்காடி பூதம். சதுக்கம் என்றால் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் என்பது பொருள். புகார் நகரில் உள்ள தீயோர்களை தண்டிப்பது தான் சதுக்க பூதத்தின் கடமையாக இருந்துள்ளது. புறம் கூறுவோர், போலி வேடம் தரித்த சாமியார்கள், அவலத்தை மறைத்து வாழும் விலை மகளிர், அறமில்லாத அமைச்சர்கள், பொய் சாட்சி கூறுபவர்கள், பிறன்மனை நோக்குபவர்கள், பெண்களுக்கு தீங்கிழைப்போர், அறம் பிறழ்வோர், திருடர்கள் ஆகியோர்களை, "நான்குகாத தூரம் வரை கேட்கும் அளவுக்கு பயங்கர சத்தம் எழுப்பிக் கொண்டே சென்று தன்னிடம் உள்ள பாசக் கயிற்றால் அவர்களை பிணைத்து வீதிகளில் வைத்து நைய புடைத்து", அப்படியே விழுங்கி விடுமாம் பூதம். சதுக்க பூதத்தின் மீது உள்ள பயத்தினால் புகார் நகர மக்கள் நீதி நெறியை கடைப்பிடித்து நேர்மையாக வாழ்ந்தனர் என்று கூறப்படுகின்றது .
சதுக்க பூதம் புகார் நகரம் வந்த கதை :
புராண காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்துள்ளது.
'ஒருமுறை பாற்கடலை கடையும் போது அமிர்தம் வெளிப்பட்ட வேளையில் அசுரர்கள் அதை கவர்ந்து சென்று விட்டனர். அமிர்தத்தினை கண்டுபிடிக்கும் பொருட்டு தேவர்களின் தலைவன், தன் தலைநகர் அமராவதியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. தான் வரும் வரை அமராவதியை காக்குமாறு நீதி நெறி தவறாது ஆட்சி செய்த சோழ மன்னன் முசுகுந்தனிடன் இந்திரன் கேட்டுக் கொண்டான். அதன்படி சோழ மன்னன் அமராவதியை காத்ததால் மகிழ்ச்சியடைந்த இந்திரன், நகரினை பாதுகாக்கும் சதுக்க பூதங்களையும், ஐவகை மன்றங்களையும் ஏனைய பிற பரிசுகளையும் கொடுத்து சோழ மன்னனை மகிழ்வித்தான்' என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு கிடைத்த சதுக்க பூதத்தினை புகார் நகரை சுற்றி காவல் காக்க பணித்தான் சோழ மன்னன் முசுகுந்தன். சதுக்க பூதத்தின் காவலினால் புகார் நகர் பாதுகாப்பாக இருந்தது. புகார் நகரில் வாழ்ந்த புறம் கூறும் ஒருவன், பத்தினி பெண் ஒருத்தியைப் பற்றி அவள் கணவனிடம் தவறாக கூறினான். இதையறிந்த சதுக்க பூதம், பொய் கூறிய அந்த தீயவனை, புகார் நகரமே அதிரும் வகையில் பெரும் சத்தம் கொண்டு பிடித்து விதிகளில் நையப் புடைத்து அடித்து இழுத்துக் கொண்டு சென்றது.
இந்த காட்சியை கண்ட புறம் கூறியவனின் தாய் கதறி அழுது கோவலனிடம் சென்று முறையிட்டாள். தாயின் கண்ணிருக்கு இரங்கிய கோவலன், சதுக்க பூதத்திடம் சென்று, “என் உயிரை எடுத்துக் கொள். இவனை விட்டு விடு” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டான். ஆனால் அப்பூதம், "தவறு செய்தவன் உயிருக்கு பதிலாக நல்லோன் ஒருவன் உயிரை எடுக்கும் தவறை நான் செய்ய மாட்டேன்" என்று கூறி அந்த புறம் கூறியவனை கொன்று தின்றுவிட்டது. அதன் பின்னர் கோவலன் அவனின் தாய்க்கும், அவன் மனைவிக்கும் பொருள் உதவிகள் செய்து வந்தான்.
இன்றைய நிலை:
முன்பு ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் இந்திரனுக்கு சோழ மன்னன் விழா எடுப்பான். அன்றைய நாளில் குடிமக்கள் சதுக்க பூதத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். போர் தொழில் செய்யும் மறக்குலத்தினர் பூதத்தின் முன் தங்களது வில், வேல், வாள், குறுவாள் போன்ற ஆயுதங்களை வைத்து அவரை, துவரை போன்ற பயிர் வகைகளையும் படைத்து, மலர் தூவி, நறுமண புகை தூபமிட்டு வெற்றிக்காக வழிபாடு செய்வார்கள்.
இவ்வாறு புகழ் பெற்ற சதுக்க பூதம் இன்று கேட்பாரற்று இருக்கிறது. செங்கற்களால் செய்யப்பட்ட ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சதுக்க பூதத்தின் சிலை சிதிலமடைந்து உள்ளது. இந்த சிலை பூம்புகார் அருகே உள்ள சாயாவனம் என்ற ஊரில் உள்ள சம்பாதி அம்மன் கோயில் அருகில் உள்ளது.