ARTICLE AD BOX
தீ சிலம்பம் சுற்றி அசத்திய 5 வயது சிறுவன் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவரா என்பது குறித்தும், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு பி.டி.ஐ (PTI Fact Check Desk) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
தற்காப்பு கலைகளுள் ஒன்றான தீ சிலம்பம் சுற்றி அசத்திய 5 வயது சிறுவன் தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது. இந்நிலையில், சிறுவன் கார்த்திக் கேரளாவின் கண்ணூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பால் ஷாகாவின் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டு, அவர் தீ சிலம்பம் சுற்றி அசத்தும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள பயனர் ஒருவர் பிப்ரவரி 23 அன்று பள்ளி வயது சிறுவன் தற்காப்புக் கலையான தீ சிலம்பம் சுற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த சிறுவன் பெயர் கார்த்திக் என்றும், கேரளாவின் கண்ணூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பால் ஷகாவின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"அவர் கார்த்திக், வயது 5, ஆர்.எஸ்.எஸ் பால் ஷகா, கேரளா, கண்ணூர் தலைமை ஆசிரியர்" என்ற கேப்சனுடன் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீ சிலம்பம் சுற்றி அசத்திய 5 வயது சிறுவன் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவரா என்பது குறித்தும், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு பி.டி.ஐ (PTI Fact Check Desk) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து பி.டி.ஐ ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அந்த வீடியோவை InVid மூலம் வீடியோவின் கீஃப்ரேம்களை பிரித்தெடுத்துள்ளனர். பிறகு கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை சரிபார்த்துள்ளனர். அப்போது, அதேபோன்று குறிப்பிட்டு பயனர்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அடுத்ததாக, வைரலாகும் வீடியோவை கவனமாக ஆய்வு செய்துள்ளனர். அதில் ஐந்து வயது சிறுவன் சிலம்பம் தற்காப்பு கலையை நிகழ்த்தும் மூன்று வெவ்வேறு வீடியோக்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பிடப்பட்ட வீடியோக்கள் பற்றிய கூடுதல் விவரங்களைச் சேகரிக்க, கூகுள் லென்ஸ் மூலம் அவற்றின் கீஃப்ரேம்களை (InVid) ஆய்வு செய்துள்ளனர். அப்போது "aarav_aj_official" என்ற பயனர்பெயருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐ.டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஐ.டி-யை பயன்படுத்தும் அவர் வைரலான பதிவில் காணப்பட்ட அதே சிறுவன் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அந்த சிறுவனின் உண்மையான பெயர் கார்த்திக் இல்லை என்பதும், அவரின் பெயர் ஆரவ் ஏ.ஜே என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுவன் முறையாக சிலம்பம் சுற்றும் சிலம்ப வீரர் என்பது பற்றி அவரது ஐ.டி-யில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பிறகு, இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை ஸ்கேன் செய்து, வெவ்வேறு நேரங்களில் வெளியிடப்பட்ட சரியான மூன்று வீடியோக்களை கண்டறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, முதல் வீடியோ (நேரம் 00:01 முதல் 00:29 வரை) ஜனவரி 13 அன்று வெளியிடப்பட்டது. இரண்டாவது வீடியோ (நேரம் 00:30 முதல் 01:21 வரை) ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்டது, மூன்றாவது வீடியோ (நேரம் 01:22 முதல் 02:11 வரை) ஜனவரி 17 இல் வெளியிடப்பட்டது.
ஆரவ் தமிழ்நாட்டில் தோன்றிய பண்டைய இந்திய தற்காப்புக் கலையான சிலம்பத்தை நிகழ்த்தி இருக்கிறார். மேலும், ஆரவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை ஸ்கேன் செய்யும் போது, அவரது சில பதிவுகளில் "stickman_silambam_academy" என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணைத்துள்ளார். இந்தப் பக்கத்தைச் சரிபார்த்தபோது, இது தமிழ்நாட்டில் உள்ள சிலம்பம் பயிற்சி அகாடமியுடன் இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள எண்ணைத் தொடர்புகொண்டு அகாடமியுடன் தொடர்புடைய ஒருவருடன் பேசியுள்ளனர். ஆரவ் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகவும், அவரைப் பற்றிய வைரலான பதிவு தவறானது என்றும் அந்த நபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மீடியா குழுவை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ஆரவ் தமிழ்நாட்டில் ஸ்வயம் சேவகராக இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறுதியில், பி.டி.ஐ தேடலின் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த சிலம்பம் தடகள வீரர் ஆரவ்வின் வீடியோ, கேரளாவின் கண்ணூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பால் ஷகாவின் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்திக் என்ற ஐந்து வயது சிறுவனின் வீடியோ என தவறாகப் பகிரப்பட்டது என்பது பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.