'திரும்பி வந்து பழிவாங்குவேன்' - ஷேக் ஹசீனா பற்றி இந்தியாவிடம் வங்கதேச அரசு கூறியது என்ன?

5 days ago
ARTICLE AD BOX

'திரும்பி வந்து பழிவாங்குவேன்' - ஷேக் ஹசீனா பற்றி இந்தியாவிடம் வங்கதேச அரசு கூறியது என்ன?

இந்தியா, வங்கதேசம், ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா கருத்துகள் தெரிவிக்காமல் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்
8 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா - வங்கதேசம் இடையே ஏற்ற இறக்கங்கள் நிறைந்த உறவில் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்ந்து ஒரு முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது. அவர் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வந்தார். அப்போது முதல் அவர் இந்தியாவிலேயே இருக்கிறார்.

இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு வங்கதேசத்தில் இருக்கும் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், இப்போது அவர் தெரிவித்துள்ள ஒரு புதிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையில் வார்த்தைப் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச இடைக்கால அரசு குறித்தும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குறித்தும் ஷேக் ஹசீனா கடுமையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு வங்கதேச இடைக்கால அரசும் எதிர்வினையாற்றியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஷேக் ஹசீனா சொன்னது என்ன?

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கிய போராட்டம், ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரே முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ஒரு இடைக்கால அரசு பதவிக்கு வந்தது.

ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். ஷேக் ஹசீனா இந்த காவல்துறையினரின் குடும்பத்தினருடன் டிஜிட்டல் கான்பிரன்ஸிங் முறையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) பேசினார்.

பிடிஐ செய்தி முகமை கூற்றுப்படி, அந்த கலந்துரையாடலின் போது, "நான் மீண்டும் வந்து உயிரிழந்த நமது நான்கு காவலர்களின் இறப்புக்கு பழிவாங்குவேன்," என ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

வங்கதேசத்தில் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா, "அவர் (முகமது யூனுஸ்) அனைத்து விசாரணைக் குழுக்களையும் ஒழித்துவிட்டு, மக்களை கொல்ல பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளார். அவர்கள் வங்கதேசத்தை அழித்து வருகின்றனர்," என குற்றம்சாட்டினார்.

தமது அரசு கவிழ்க்கப்பட்ட போது தாம் மரணத்தின் பிடியிலிருந்து நூலிழையில் தப்பியதாகவும், ஏதோ நல்லது செய்யவேண்டும் என்பதற்காகவே கடவுள் தம்மை இன்னும் உயிருடன் வைத்திருப்பதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

"நான் மீண்டும் வந்து அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்," என்றார் அவர்.

முகமது யூனுஸ் மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள ஷேக் ஹசீனா, நாட்டில் நடைபெற்ற கொலைகள் எல்லாம் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு சதி என கூறியிருந்தார்.

ஷேக் ஹசீனாவின் இந்த கருத்துகளுக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் ஊடக செயலாளர் ஷஃபீகுல் ஆலம் பதிலளித்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம், ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வங்கதேசத்திலிருந்து வெளியேறியது முதல் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருக்கிறார்

இடைக்கால அரசு சொன்னது என்ன?

ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து திரும்ப கொண்டு வருவது தங்களது முதன்மையான பணி என வங்கதேசத்தில் இடைக்கால அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷஃபீகுல் ஆலம், ஹசீனா மீதான வழக்கு விசாரணைக்காக அவரை திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. அந்த கட்சி நாட்டின் அரசியலில் இருக்க வேண்டுமா கூடாதா என்பதை வங்கதேச மக்களும், அரசியல் கட்சிகளும்தான் முடிவு செய்ய வேண்டும் என ஆலம் தெரிவித்திருந்தார்.

இத்துடன், கொலை, மக்கள் காணாமல் போனது மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுபவர்கள் நிச்சயம் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா குறித்து இதுபோன்ற கருத்து வருவது இது முதல்முறையல்ல. அண்மையில் மஸ்கட் சென்றிருந்த வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன் ஆங்கில நாளிதழான 'தி இந்து'விடம் பேசினார்.

அப்போது ஹசீனாவுக்கு எதிராக ஒரு வழக்கு இருப்பதாகவும், அவர் அந்த வழக்கை எதிர்கொள்வதற்காக அவரை அனுப்பி வைக்கும்படி இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தவ்ஹீத் தெரிவித்திருந்தார். இந்திய அரசு இதை செய்யாத பட்சத்தில், வங்கதேச மக்களின் மனம் புண்படும் படியான, உணர்ச்சிகளை தூண்டக்கூடிய, தவறான கருத்துகளை வெளியிடாமல் இருக்கும்படி ஹசீனா மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

"அவரது செயல்களால் மக்கள் கோபத்தில் உள்ளனர். வங்கதேசத்தின் நிலையை அவர் (ஹசீனா) சீரழிக்காமல் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்றும் அவர் கூறினார்.

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் கேட்குமா? என தவ்ஹீத் ஹுசைனிடம் கேட்கப்பட்ட போது, "இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது. சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ள குற்றம்சாட்டப்பட்ட பலரை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளோம். இந்தியா அதேபோல சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக வங்கதேசத்திடம் ஹசீனாவை ஒப்படைக்கும் என நினைக்கிறேன்," என்றார்.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் உண்மை அறியும் அறிக்கையை வங்கதேசத்தின் இடைக்கால அரசு, தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மனித குலத்திற்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து பேசுவதாக வங்கதேச ஊடக செயலாளர் ஷஃபீகுல் ஆலம் சொல்கிறார்.

இந்தியா, வங்கதேசம், ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ்

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, கடந்த ஞாயிறு மஸ்கட்டில் தவ்ஹீத் ஹுசைன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் இடையே நடந்த சந்திப்பு

ஐநா அறிக்கை சொல்வது என்ன?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் அலுவலக அறிக்கைக்கு, 'வங்கதேசத்தில் 2024 ஜூலை மற்றும் ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தோடு தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் மற்றும் அத்துமீறல்கள் (Human Rights Violations and Abuses Related to the Protests of July and August 2024 in Bangladesh) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஹசீனா அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர், அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள் மீதும், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.

ஹசீனாவின் அவாமி லீக் அரசு போராட்டக்காரர்களின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் விளைவாக காவலில் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கலவரத்தின் போது, அதிகாரிகள் உட்பட 44 காவல்துறையினர் உயிரிழந்தனர். அவாமி லீக் ஆட்சியின் போதும் அதன் வீழ்ச்சிக்கு பின்னரும், நாட்டில் உள்ள 639 காவல் நிலையங்களில் 450 காவல் நிலையங்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் அல்லது அழித்திருக்கின்றனர்.

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர் பழிவாங்கும் உணர்ச்சி மேலிட்டதால் வன்முறை அதிகரித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், சிறுபான்மை இந்து சமுதாயத்தினர் மீதான தாக்குதல்களும் வெளிச்சத்திற்கு வந்தன. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வங்கதேசத்திடம் இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்தியா, வங்கதேசம், ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சில நாட்களுக்கு முன்னர், வங்கதேசத்தின் தன்மோண்டியில் வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் போராட்டக்காரர்களால் இடிக்கப்பட்டது.

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து 'தி இந்து' நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன் பதிலளித்திருந்தார். அதில் அவர் ஐநா அறிக்கையை சுட்டிக்காட்டியிருந்தார்.

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு, பெரும்பான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் இருப்பதாகவும், பாதுகாப்பு குறித்த விஷயத்திலும் அவர்களுக்கு சம உரிமைகள் இருப்பதாகவும் தவ்ஹீத் ஹுசைன் தெரிவித்திருந்தார்.

"துரதிர்ஷ்டவசமாக ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு, (கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பதவி விலகிய போது) பெரும்பாலும் பொய்களை அடிப்படையாக இந்த விஷயம், இந்திய ஊடகங்களில் கண்மூடித்தனமாக விவாதிக்கப்பட்டது. அண்மையில் வெளியான ஐநா அறிக்கை, வன்முறையில் இடைக்கால அரசுக்கு தொடர்பில்லை என சொல்வதைப் பாருங்கள். அந்த சூழ்நிலை குறித்து எந்த சார்பும் அற்ற ஒரு விசாரணை வேண்டும் என நாங்கள் விரும்பியதால் அவர்கள் எங்கள் கோரிக்கையின்படி வந்தார்கள்," என தவ்ஹீத் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனாவின் சமீபத்திய கருத்துகளுக்கு பிறகு இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இருப்பினும், ஷேக் ஹசீனாவை அமைதியாக இருக்கும்படி இந்தியா சொல்ல வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article