ARTICLE AD BOX
மதுரை அருகே உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் தற்போதைய மதச்சர்ச்சையால் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த குன்றத்தின் தொல்லியல் வரலாறு, கோவில், தர்கா ஆகியவற்றின் பின்னணி குறித்து மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்களிடம் உரையாடினோம். அந்திமழையின் கேள்விகளுக்கு அவர் விளக்கமாகச் சொன்ன பதில்கள் கட்டுரை வடிவில்.
கி.பி.1300ஆம் ஆண்டு வாக்கில் பாண்டியநாட்டில் யார் பட்டத்து அரசர் ஆவது என்கிற பிரச்னை ஏற்பட்டது. சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே பிரச்னை. வீரபாண்டியனுக்கு அவர் தந்தை குலசேகரபாண்டியன் பட்டம் சூட்டிவிட்டார். இதை எதிர்த்து கலகம் செய்தார் சுந்தரபாண்டியன். வீரபாண்டியனை வீழ்த்த டெல்லி அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூரை படையெடுத்துவருமாறு அழைக்கவும் செய்தார். அந்த படையெடுப்பு 1311-இல் நடந்தது. பெரிய அழிவுகள், சேதாரங்களை அந்த இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்த்திவிட்டுச் சென்றது. அதன் பின்னர் 1330 முதல் 1370வரைக்கும் மதுரை சுல்தான்களின் ஆட்சி நடந்தது. இவர்கள் மாலிக்காபூருடன் வடக்கே இருந்து படையெடுத்துவந்தவர்கள்தான். மிகவும் கொடூரமான ஆட்சிதான் அது. நாற்பது ஆண்டுகளில் பத்து சுல்தான்கள் ஆண்டனர். இதில் கடைசியாக இருந்தவர் சிக்கந்தர் ஷா. இவரது கொடுங்கோல் ஆட்சியை மக்கள் எதிர்த்தனர். கிளர்ச்சி செய்தனர். அவர் தப்பி ஓடி திருப்பரங்குன்றம் மலைமீது தஞ்சம் புகுந்தார். மக்கள் விரட்டிச் சென்றனர். ஒரு குகையில் பதுங்கியபோது வெளியே வரமுடியாமல் பாறைகள் வைத்து அடைத்துவிட்டார்கள். அப்படியே இறந்துவிட்டார். அவர் இறந்த இடத்தில்தான் ஒரு தர்கா அவரது நினைவாக கட்டப்பட்டுள்ளது.
1378-இல் விஜயநகரப் பேரரசர் முதலாம் புக்கரின் மகன் குமாரகம்பணன் படையெடுத்து வருகிறார். இங்கே கொஞ்சம் நஞ்சம் இருந்த இஸ்லாமியர்களைத் தோற்கடித்து விஜயநகர ஆட்சிக்கு வழிகோலினார். நாடும் இந்துமத ஆட்சியாளர்கள் வசம் வந்தது. எனவே சிக்கந்தர் ஷா இறந்தது 1970இல் இருந்து 78க்குள் ஏதோ ஒரு ஆண்டு என்று வைத்துக்கொள்ளலாம்.
இதன் பின்னர் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்த தர்கா கட்டப்பட்டிருக்கலாம். 1760களில் யூசுப் கான் என்கிற கான்சாகிபு மதுரையை ஆட்சி செய்தார். அந்த நேரத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம். இந்த தர்ஹா 250- 300 ஆண்டுகள் பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை. இங்கே மக்கள் சென்று ஆடு கோழி பலிகொடுத்து வழங்குவது வழமையாக நடப்பதுவே. தற்போது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு இப்பிரச்னையை கிளப்ப முயற்சித்தனர். இச்சமயம் காவல்துறையும் மேலே நீங்கள் ஆடுகோழி கொண்டுபோகக்கூடாது என்று தடை விதித்தது. ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளதுதான் என்றால் ஆதாரம் கொண்டா என்றனர். அதற்கு எப்படி காண்பிக்கமுடியும்? வழக்கமான நடைமுறைதானே? அதைச் செய்துவந்தவர்கள் சொல்வதுதான். இந்துக்களே இது வழக்கமாக நடப்பதுதான் என்கிறார்கள். 35 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் வாழும் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்,’நானே பலமுறை சென்று அங்கே சாப்பிட்டுள்ளேன். அனைவரையும் அழைப்பார்கள். அங்கே நெல்லித்தோப்பு பகுதியில் பந்திபோட்டு சாப்பாடு நடக்கும் ’எனப் பதிவு செய்கிறார். இன்னும் சில நண்பர்கள் வீட்டில் அறுத்துக் கறியாக்கி மேலே கொண்டுபோய் சமைத்துப் பரிமாறுவோம் என்கிறார்கள். தூர ஊர்களில் இருந்துவருகிறவர்களும் கறியாகக் கொண்டுபோய் சமைத்துச் சாப்பிடுவோம் என்கிறார்கள். அந்த தர்காவுக்கு நேர்த்திக் கடனாக இதைச் செய்வது குறைந்தது இருநூற்றாண்டு வழக்கம்.
அரசியல்நோக்கங்களுக்காக திசை திருப்பல்கள் நடக்கின்றன. அரசும் கண்டும் காணாததுபோல் உள்ளது. உள்ளூரில் ஒரே தெருவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே வாழ்கின்றனர். வேற்றுமை இல்லை. இப்பிரச்னைக்கு வெளியூரில் இருந்து ஆட்களைத்திரட்டிக் கொண்டுவந்துள்ளனர்.
இதை ‘முருகன் குன்றம்’ என சங்க இலக்கியத்தில் அகநானூறு பாடல் 53-இல் மதுரை இளநாகனார் குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட பாடல்.
முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். இதை ஸ்கந்தர்மலை என சமஸ்கிருத மயப்படுத்துகிறார்கள். ஸ்ரீசுப்ரமணிசாமி கோயில் என இந்த கோவிலை அரசுப் பதிவுகள் சொல்கின்றன. ஆனால் இந்த பெயருக்கு கல்வெட்டு ஆதாரமில்லை. மேலே சொன்னதுபோல் முருகன் குன்றம் என இலக்கிய ஆதாரம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் தேவார மூவர் இதைச் சிவன் கோவிலாகத்தான் பாடுகிறார்கள். திருப்பரங்குன்றமுடைய நாயனார் என 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் சொல்கின்றன. இறைவிக்குப் பெயர் திருக்காமகோட்டமுடைய நாச்சியார் என்பதாகும். மீனாட்சிக்கு என்ன பெயரோ அதுவே இந்த திருப்பரங்குன்ற பார்வதிக்கும் பெயர்.
ஆறாம் நூற்றாண்டில் எழுந்த திருமுருகாற்றுப்படையில் ஆடுவெட்டி அந்த ரத்தத்தை தினையரிசியில் தோய்த்துப் படையலிட்டதாகப் பாடல் உள்ளது. எனவே முருகன் சைவம். அவனுக்கு ஆடுகோழி படையலிடக்கூடாது எனச் சொல்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
இப்போது இருக்கும் குடைவரைக் கோவில் கிபி 773 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடை வரகுணன் என்பவரின் சேனாதிபதி சாத்தன் கணபதி இந்த கோவிலை வெட்டுவித்தார். அவரது மனைவி நக்கன் கொற்றி என்பவர் துர்க்கைக்கும் ஜேஷ்டாதேவிக்கும் இங்கே குடவரை கோவில் எடுத்ததாகச் சொல்கிறார். ஜேஷ்டா தேவியை மூதேவி என ஒதுக்கியதால் அது உள்ளே பூட்டுப் போடப்பட்டு உள்ளது. யாரும் அனுமதிக்கப்பபடுவது இல்லை. 773 இல் அது வணங்கப்படக்கூடிய தெய்வமாக இருந்தது. அடுத்த நூறு ஆண்டுகளில் அதை தமிழ் மக்கள் ஒதுக்கிவிட்டோம். பெருந்தெய்வங்களின் வருகையால் இது மறைந்துவிட்டது.
இதன் கிழக்குப்பக்கத்தில் சிவன் சன்னதியும் மேற்குப்பகுதியில் பெருமாள் சன்னதியும் இடையில் முருகன், துர்க்கை, விநாயகர் என மூன்று தெய்வங்களும் இருக்கும்வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த ஐந்து தெய்வங்களூக்கும் சேர்த்து ‘ப’ வடிவில் இந்த கோவில் அமைந்துள்ளது. அப்போதும் இங்கே தலைமைக்கடவுள் முருகன் அல்ல. சிவன் தான்! முருகன் பரிவார தெய்வங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்.
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் வந்தபின்னர்தான் முருக வழிபாடு முதன்மையாக்கப்படுவதாகக் கருதலாம். இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டபோது சுப்ரமணியர் என்று சமஸ்கிருதப் பெயரால் அழைக்கிறார்கள்.
வள்ளி என்ற குறவர் குலப் பெண்ணை மணந்தவர்தான் முருகன். இந்திரனின் மகள் தேவசேனாவை மணம் செய்தார் என்று புராணமயமாக்கல் பின்னர் நிகழ்கிறது. மங்கம்மா ஆட்சியின்போது 17 ஆம் நூற்றாண்டில் இது சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
முருகன் குன்றம் என சங்கப்பாடலில் பதிவான அதே காலகட்டத்தில் இக்குன்றின் மேற்குப் பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூன்று உள்ளன. பிறகு பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் சமணச் சின்னங்கள் இருந்துள்ளன. சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
இன்றைய நிலையில் இது முருகன் குன்று; சமணக் குன்று. அத்துடன் இஸ்லாமிய தர்காவும் உள்ளது. இந்திய அரசின் தொல்லியல் சட்டப்படி நூறு ஆண்டுகளைக் கடந்த எந்த கட்டுமானம் இருந்தாலும் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப் பார்த்தால் இந்த மூன்றுமே இச்சட்டப்படி பாதுகாக்கப்படவேண்டியவை. இதற்கு எந்த தொந்தரவு செய்தாலும் சட்டப்படி தண்டிக்கத் தக்கது.