ARTICLE AD BOX
திருப்பதி போறீங்களா? பக்தர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு.. இதை படிங்க மக்களே
திருப்பதி: திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நிலையில் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோவில் அமைந்துள்ளது. இந்த திருப்பதி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து கொடுத்து வருகிறது. இருப்பினம் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த அச்சுறுத்தல் என்னவென்றால் சிறுத்தை நடமாட்டம் தான்.
திருப்பதியில் செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அலிபிரி நடைப்பாதையில் காலிகோபுரத்தில் தான் சிறுத்தை தென்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணியளவில் அங்கு சிறுத்தை வந்து சென்றது. இது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்ப கேமராவில் பதிவாகி உள்ளது. சிறுத்தை நடமாடிய சமயத்தில் பக்தர்கள் யாரும் இல்லை. இதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை.
இந்த சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்களுக்கு முக்கிய அறிவுரையை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி உள்ளது. அதன்படி திருப்பதி செல்லும் பக்தர்கள் தனியாக செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பக்தர்கள் அனைவரும் கூட்டமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வனத்துறையினர் மீண்டும் கண்காணிப்பு பணியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பதி மலைப்பாதையில் மதியம் 2 மணிக்கு மேல் 12 வயதிற்கு குறைவான சிறுவர், சிறுமியர் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தற்போதும் அமலில் உள்ள நிலையில் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டமாக மட்டுமே மலையேற வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த பகுதியில் சிறுத்தை என்பது முதல் முதலாக தென்படவில்லை. ஏற்கனவே பலமுறை சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இங்கு மட்டுமின்றி திருப்பதி கோவிலுக்கு செல்லும் பல இடங்களில் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடி வருவது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.