ARTICLE AD BOX
முருகப்பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த அறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ஒன்றாகும். திருச்செந்தூர் கோவிலில் முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணற்றவை இருந்தாலும், தன்னுடைய பக்தரை காப்பாற்ற வந்த திருச்செந்தூர் முருகனின் கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பணியாற்றிய வென்றிமாலை என்ற பக்தர் முதுமை காரணமாக நைவேத்தியத்தை சரியான நேரத்திற்கு செய்து தரமுடியாமல் போனது. இதனால் அவரை மற்ற அர்ச்சகர்கள் கடுமையாக கண்டித்தனர். இதனால் மனம் உடைந்து போனவர் தன் உயிரை விட்டுவிடும் எண்ணத்தில் கடலில் இறங்கினார். அப்போது ஒரு தெய்வீக சிறுவன் அவரை தடுத்தி நிறுத்தி காரணத்தைக் கேட்டான்.
அப்போது வென்றிமாலை அச்சிறுவனிடம் தன் தூயரத்தை எல்லாம் கூறினார். அதை பொறுமையாகக் கேட்ட அந்த சிறுவன், ‘உங்களுக்கு இன்னும் ஒரு முக்கிய பணி இருக்கிறது. நீண்டகாலமாக நீங்கள் திருச்செந்தூரில் உள்ளதால், நீங்கள் திருச்செந்தூரின் தலப்புராணத்தை எழுதுங்கள்!’ என்று கூறிவிட்டு சிறுவன் வடிவில் வந்த முருகன் மறைந்தார்.
பின்பு முருகன் கொடுத்த அந்த பணியை ஏற்ற வென்றிமாலை கிருஷ்ண சாஸ்த்திரி என்பவரின் உதவியோடு திருச்செந்தூர் தலப்புராணத்தை எழுத தொடங்கினார்.
அதை எழுதி முடித்ததும் உடனே அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று எண்ணி அர்ச்சகர்களை நாடிய போது அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனால் மனம் நொந்த வென்றிமாலை தான் எழுதிய திருச்செந்தூர் தலப்புராணத்தை கடலில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.
கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நூல் ஒரு அறிஞர் கண்ணில் பட்டது. அதை எடுத்து படித்த அவர் அந்த நூலில் காணப்பட்டுள்ள ஆன்மீகத்தன்மையால் ஆச்சர்யமடைந்து அதை அர்ச்சகர்களிடம் எடுத்துச் சென்றார். அந்த நூலை எழுதியது யார் என்று பார்த்தப்போது, அதில் ‘வென்றிமாலை’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு வென்றிமாலையை அவர்கள் மரியாதையோடு அழைத்து வந்து அவரிடம் நடந்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு செந்திலாண்டவர் முன்னிலையில் திருச்செந்தூர் தலப்புராணத்தை சிறப்பாக அரங்கேற்றம் செய்தனர்.