ARTICLE AD BOX
திருச்சி விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சென்னை, திருச்சி, மதுரை, திருப்பதி, ராஜமுந்திரி உட்பட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அரசு - தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் திங்கட்கிழமை எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார். அதில், திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் அரசு- தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முக வடிவேல்