ARTICLE AD BOX
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரே அரசு பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை மாற்றுத்திறனாளி மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ராஜேஸ்வரி (18) என்ற மாணவியும் தங்கி பயின்று வந்தார்.
12ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, தற்பொழுது பொதுத் தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த விடுதி கண்காணிப்பாளர் இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு பள்ளி தரப்பிலும் அந்த மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை முன்பு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திடீரென்று மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.