இசையால் இந்தியாவுக்கு புகழ் தந்த இளையராஜா!

2 hours ago
ARTICLE AD BOX

இயல், இசை, நாடகம் என்பதுதான் முத்தமிழாகும். இதில் கிடைக்கும் புகழ்தான் தமிழுக்கு பெருமை சேர்க்கும். அந்தவகையில், 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்த இசைஞானி இளையராஜா இப்போது ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இன்னும் ஒருபடி மேலே சென்று அன்னை தமிழுக்கும் புகழ் தேடி கொடுத்துள்ளார்.

ஒரு பாடலை வாய்மொழியாக பாடுவதும், இசைக்கருவிகளை மீட்டி வாசிப்பதும் வேறு, வேறு. அந்தவகையில், ஒரு கதையை அல்லது சம்பவத்தை இசை வடிவில் அதுவும் ஏராளமான இசைக்கருவிகளை மீட்டி உயிர்க்கொடுப்பதுதான் சிம்பொனி. சுருக்கமாக சொன்னால், சிம்பொனி என்பது ஒரு ஆர்க்கெஸ்ட்ரா. ஒரு இசைக்குழு அவ்வளவுதான். ஆர்க்கெஸ்ட்ராவை பல வகைகளாக பிரித்தாலும், சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா என்று இருவகைகளில் உள்ளடக்கலாம். 16-ம் நூற்றாண்டு வரை இசையும், பாடலும் ஒன்றாக கலந்தேதான் இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்கமுடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்துகொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சிம்பொனி.

சிம்பொனிக்கு சரியான வடிவத்தை கொண்டுவந்து புகழ்பெற வைத்தவர் சிம்பொனியின் தந்தை என்று அழைக்கப்படும் ஜோசப் ஹைடன் என்ற இசை கலைஞர்தான். 1732-ம் ஆண்டு பிறந்து 1809-ம் ஆண்டு வரை வாழ்ந்த இவர்தான் சிம்பொனி இசையின் ஜாம்பவான்களான மொஸார்ட், பீத்தோவன் ஆகிய இருவருக்கும் குருநாதராவார். சிம்பொனி என்பது குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 2 மணிநேரம் வரை இசைக்கப்படவேண்டும். 28 முதல் 24 வகையான இசைக்கருவிகளை 80 முதல் 120 இசைக்கலைஞர்கள் வரை வாசிக்கவேண்டும். இதை எத்தனை பகுதிகளாகவும் பிரித்து வாசித்துக்கொள்ளலாம். மிக முக்கியமாக சிம்பொனி இசையை ஸ்டூடியோவுக்குள் உருவாக்கி பின்னர் அதை வெளியிடக்கூடாது. பொதுவெளியில் ஒரு அரங்கத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில்தான் இசைக்கப்படவேண்டும். அதுதான் சிம்பொனியாக ஏற்றுக்கொள்ளப்படும். இத்தகைய புகழ்பெற்ற சிம்பொனியை இளையராஜா 35 நாட்களில் எழுதி, கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை நள்ளிரவில் லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கில் ராயல் பிலார்மாலிக் ஆர்க்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவை மீட்ட வைத்து அரங்கேற்றினார்.

மொத்தம் 4 பகுதிகளாக இடைவிடாமல் 90 நிமிடங்கள் இந்த சிம்பொனியை இளையராஜா நடத்தி, கூடியிருந்த அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார். பொதுவாக சிம்பொனியை இசைத்து முடிக்கும் வரை யாரும் கை தட்டக்கூடாது என்பதுதான் விதி. ஆனால் இளையராஜா முதல் பகுதியை முடித்தபோது, அரங்கமே அதிரும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர். இதுவரை இளையராஜா பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சிம்பொனியை இசைப்பது என்பது அவரது கனவாகவே இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து நீண்டநேர இசைத்தொகுப்பை வெளியிட்டது, திருவாசகத்தை மேற்கத்திய இசைக்கருவிகளோடு இசையோடு வெளியிட்டது என்ற புகழ்மிக்க வரிசைக்கு மணிமகுடம் சூட்டியதுபோல சிம்பொனி இசையை லண்டனில் வாசித்து உலக புகழ் பெற்றுவிட்டார். தான் பிறந்த மண்ணான தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். 82 வயதில் இந்த சாதனையை இது ஒரு தொடக்கம்தான், இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் என்றுகூறி இன்னும் பல சாதனைகளுக்கான முன்னறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார்.


Read Entire Article