ARTICLE AD BOX
X தளம் தவழ்ந்து தவழ்ந்து தான் வேலையே செய்கிறது. நேற்று மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்த பிரச்னை, நேற்று நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. வெப் பிரவுசர், ஆண்டிராய்டு , IOS என எல்லா வகைகளிலும் X தளம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இப்படியான சூழலில் தான் நேற்று இரவு , X தளத்தின் மீது சைபர் அட்டாக் தொடுக்கப்பட்டிருக்கிறது என போட்டுடைத்திருக்கிறார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். தடாலடியன பதிவுகளுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க், அவ்வளவு எளிதாக எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால், X மீதான சைபர் அட்டாக் அதிகரித்துகொண்டே இருந்ததால், வேறு வழியின்றி சைபர் அட்டாக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க் . எலான் மஸ்க்கிற்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் ; டெஸ்லா கார்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் என ஏற்கெனவே எலான் மஸ்கிற்கு எதிராக நடக்கும் சம்பவங்களுடன் இதையும் பொருத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதனால் தான் தெளிவாக ஒரு குழுவோ, அல்லது ஒரு நாடோ கூட இந்த சைபர் தாக்குதல் பின் இருக்கலாம் என எச்சரிக்கிறார் எலான் மஸ்க்.
நேற்று மதியம் 3 மணி அளவில் சுமார் X தளம் வேலை செய்யவில்லையென கிட்டத்தட்ட 20000 புகார்கள் வந்தன. அதை 20 நிமிடங்களில் X தள டெக்கிகள் சரி செய்தனர். ஆனால், மாலை மீண்டும் பிரச்னை அதிகமானது. 7.30 மணி அளவில் X தொழில்நுட்ப கோளாறு பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. 7 மணி முதல் 12 மணி வரை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பிரச்னை நீடித்தது. 40000 புகார்கள் வரை பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் இதற்குப் பின்னால் ஒரு குழு இருப்பதாக் சந்தேகிக்கிறார் எலான் மஸ்க். இது சைபர் அட்டாக் எனவும், இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார். நேற்று ஒரே நாளில் டெஸ்லாவின் பங்குகள் 15% வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார பிரச்னைகள் தான் டெஸ்லாவின் பங்கு வீழ்ச்சிக்கு காரணம் என்றாலும், எலான் மஸ்க்கின் மீதான மக்களின் கடுங்கோபமும் இதற்குப் பின்னால் இருக்கின்றது .
மக்கள் நிம்மதியாக இருப்பதே சமூக வலைதளங்களில் தான், அதையும் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சைபர் அட்டாக் எல்லாம் வந்தால் என்ன செய்வது என புலம்புகிறார் டிவிட்டர்வாசிகள்.