ARTICLE AD BOX
”மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் தேர்தல் கால ஏமாற்று நாடகம்தான். திமுகவின் இது போன்ற ஏமாற்று நாடகங்களை நினைவு தெரிந்த நாள் முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தி எதிர்ப்பு என்று சொல்வார்கள். ஆனால், திமுகவினர் தேர்தலின் போது இந்தியில் பேசி ஓட்டு கேட்கின்றனர். இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பாக திமுக நாடகம் நடத்துகிறது. உண்மையில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது. இந்த விஷயத்தில் நாங்கள் தனித்துதான் போராடுவோம். ஒரு மொழியை அழித்தால் இனம் அழிந்து விடும் என்பதால் இந்தியைத் திணித்து தமிழை அழிக்க பாஜக நினைக்கிறது. நாங்கள் பிற மொழியை எதிர்த்து எங்கள் மொழியைக் காப்பாற்ற போராடுகிறோம்.
திமுக தொண்டர்களுக்கு இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆங்கிலத்தை தார்பூசி அழிக்கின்றனர்” என்று சீமான் தெரிவித்தார்.