ARTICLE AD BOX
‘இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்’’ என அதிமுக., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனை குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த “ஊழல் திலகங்களான” இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை”.
அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் அம்மன் கே.அர்ச்சுனனின் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது, தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம். நல்லாட்சி அமைப்போம்”எனத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6.30 மணி முதல் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அவரது இல்லத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.