ARTICLE AD BOX
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், ``மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்க துணிவில்லாமல், தமிழகத்தில் முதுகெலும்பில்லாத முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். திராவிட பாரம்பர்யமான இருமொழிக் கொள்கையில் உறுதியாக இல்லாமல் தள்ளாட்டத்துடன் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார்.
எதிர்கட்சிகளின் நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கு முறையை ஏவி வருகிறார். அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதே வழியில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாராயணசாமியும் செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், சி.பி.ஐ-க்கு புகாரளிப்பேன் என்று வெற்று வாய்ஜாலம் காட்டி வருகிறார். ஒரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறும் தகுதி கூட நாராயணசாமிக்கு இல்லை. பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்த அரசாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், தி.மு.க-வும் மாறி மாறி தங்களுக்குள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன.
இந்தியா கூட்டணி என்பது முழுவதும் சேதமடைந்த, பயன்படாத வண்டி. இதை புரிந்துகொள்ளாமல் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வுடன் சேர்ந்து அ.தி.மு.க-வை அழிக்க நினைத்த துரோகிகளின் சதிகளை முறியடித்து கழகத்தை மீட்டெடுத்தவர் எடப்படியார். துரோகிகளுக்கு கட்சியில் எப்போதும் இடமில்லை. கடந்த தேர்தலில் பலாப்பழத்தைப் போல, தற்போது வேறு ஏதாவது பழத்தை துரோகிகள் தேடிக் கொள்வார்கள்” என்றார்.
சீண்டும் தி.மு.க... ‘கப்சிப்’ காங்கிரஸ்... புதுச்சேரி ‘இந்தியா’ கூட்டணி மல்லுக்கட்டு!