ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக காளியம்மாள் தெரிவித்த நிலையில், அவர் தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர் காளியம்மாள். குறிப்பாக, கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக அவர் பொறுப்பு வகித்தார். பல்வேறு கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாக பேசி வந்தது, அக்கட்சி தொண்டர்கள் இடையே அவரை பிரபலப்படுத்தியது.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகப்போவதாக கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல், கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் (பிப் 25) காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் எந்தக் கட்சியில் அடுத்ததாக இணைவார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் அல்லது தி.மு.க-வில் காளியம்மாள் இணையலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து எந்த விதமான பதிலும் காளியம்மாள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில், காளியம்மாளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் களத்தைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்ட பின்னர், நாம் தமிழர் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளை தி.மு.க-வில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி மூலம் காளியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை தந்திருந்தார். அப்போது ராஜீவ் காந்தி மற்றும் காளியம்மாளுடன், அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, த.வெ.க-வில் இணைவது தொடர்பாக அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்தையும் காளியம்மாள் சந்தித்து பேசியதாக தகவல் உலா வந்தது.
தி.மு.க உடனான பேச்சுவார்த்தையின் போது காளியம்மாள் சில டிமாண்டுகளை முன்வைத்ததாக தெரிகிறது. இதனால், அவரே ஒரு முடிவுக்கு வரும் வரை இது குறித்து பேச வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக மாவட்ட நிர்வாகிகள் இடையே கூறப்படுகிறது.
இந்த சூழலில், எந்தக் கட்சியில் இணைந்தால் தனக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதை காளியம்மாள் உணர்ந்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். தி.மு.க-வில், காளியம்மாள் இணைந்தால் நாகை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அவர் நிறுத்தப்படலாம் என்று சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.
முன்னதாக, காளியம்மாள் விலகல் குறித்த கேள்விகளுக்கு 'இது களையுதிர் காலம்' என்று சீமான் பதிலளித்தார். இந்நிலையில், காளியம்மாள் தி.மு.க-வில் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் அரசியல் நிர்வாகிகள் இடையே கருத்து இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரையில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி - க. சண்முகவடிவேல்