ARTICLE AD BOX
தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், TVK
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- 18 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 1967லிலும் 1977லிலும் நடந்ததைப் போல மீண்டும் நடக்கக்கூடும் எனப் பொருள்பட பேசியிருக்கிறார். அப்போது நடந்தது போல தற்போது நடக்குமா?
இந்த நிகழ்வில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், 1967இல் அண்ணாவின் பின்னால் இளைஞர்கள் இருந்ததைப் போலவும் 1977இல் எம்.ஜி.ஆரின் பின்னால் இளைஞர்கள் இருந்ததைப் போலவும், தற்போது தங்கள் பின்னால் இளைஞர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க. மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மகாபலிபுரத்தின் பூஞ்சேரியில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. இந்தக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை வெளியேறச் சொல்லும் வகையில் #GetOut என்ற கையெழுத்து இயக்கத்தை விஜய் துவக்கி வைத்தார்.
இந்த விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் என சுமார் 3,000 பேர் பங்கேற்றனர். இந்த விழாவில் விஜய் பேசுவதற்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் ஆகியோர் பேசினர்.

ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோர் பேசியது என்ன?
ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், தி.மு.கவை கடுமையாக விமர்சித்தார். கடந்த 70 வருட அரசியல் எப்போதும் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது எனக் குறிப்பிட்டவர், பெரியாரையும் சமூக நீதியையும் பேசிவிட்டு, சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் இன்றைய அரசியல் ஊழல்வாதிகளிடம் இருப்பதாகவும் பேசினார். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் கனவு எதுவும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு பேச வந்த பிரஷாந்த் கிஷோர், ஊழல், வகுப்புவாதம், வாரிசு அரசியல் இல்லாத வளர்ச்சி தமிழ்நாட்டில் தேவை எனக் குறிப்பிட்டார்.
அப்போது, "பிரதமர் உள்ளிட்ட பலரும் குஜராத் மாடல் வளர்ச்சியை முன்வைக்கிறார்கள். ஆனால், CCD இல்லாத தமிழ்நாடு மாடல் வளர்ச்சி, அதாவது ஊழல் (Corruption), வகுப்புவாதம் (Communalism), வாரிசு அரசியல் (Dynasty) இல்லாத தமிழ்நாடு மாடல் வளர்ச்சிதான், தமிழ்நாடும் மற்ற மாநிலங்களும் பின்தொடர வேண்டிய மாடலாக இருக்கும். இதை த.வெ.க. கொண்டு வரும் என நம்புகிறேன்" என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஊழல், முன்னெப்போதும் கண்டிராத ஊழலாக இருக்கிறது. அடுத்ததாக, வகுப்புவாதம். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக 20 சதவீத மக்கள் அச்சத்தில் இருக்கும்போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க முடியாது. நாட்டை உருவாக்கிய நம்முடைய மூத்த தலைவர்கள் இதுபோன்ற ஒரு சூழலை எதிர்பார்த்திருக்கவில்லை.
வாரிசு அரசியலைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவின் மகன்கள்தான் விளையாடுவார்கள் என்றால் தோனி, சச்சின் போன்றவர்கள் வந்திருக்க முடியுமா? துணிச்சல், மற்றவர்கள் மீதான பரிவு, உறுதி ஆகியவைதான் த.வெ.க. தொண்டர்களுக்குத் தேவை" என்று குறிப்பிட்டார்.
- சந்தரா: சமணர்கள் உண்ணாவிரதம் இருந்து மரணிக்கும் நடைமுறையை பின்பற்றுவது ஏன்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
- செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர்
'எதிர்ப்புகளை இடது கையால் புறந்தள்ளினோம்'

பட மூலாதாரம், ANI
இதற்குப் பிறகு விஜய் பேச வந்தார். தங்கள் பின்னால் இளைஞர்கள் நிற்பதால், 1967லும் 1977லும் நடந்ததைப் போன்ற மாற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
"யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பது தெரியாது. அதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ கிடையாது என்று சொல்வார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அது ஜனநாயக உரிமை என்பார்கள். ஆனால், மக்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் ஒரு சிலருக்கு எரிச்சல் வருகிறது. வரத்தானே செய்யும்.
என்னடா இவன் திடீர்னு 'என்ட்ரி' கொடுத்துட்டானே.. நாம் சொன்ன பொய்யை நம்பி வாக்களித்து வந்தார்கள். இப்போது இவனை என்ன செய்யலாம், எப்படி காலி செய்யலாம் என்று ஒரு குழப்பம் வரும். இந்தக் குழப்பத்தால் கத்துவதா, கதறுவதா எனத் தெரியாமல் 'வர்றவன் போறவன்லாம் கட்சி ஆரம்பிக்கிறான்' என்று பேசத் தொடங்குவார்கள்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராகப் பேசுகிறார்கள் அல்லவா, அதைப் போல. இது மாதிரியான களத்தில் கொஞ்சம்கூட பயம், பதற்றம் இல்லாமல், எதிர்ப்புகளை இடது கையால் புறந்தள்ளிவிட்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று விஜய் கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்த நேரத்தில்தான் நம் கட்சி மீது ஒரு புகார் சொல்கிறார்கள். அதாவது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாக இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? அண்ணாவும் எம்.ஜி.ஆரும் கட்சி ஆரம்பித்தபோது பின்னால் நின்றவர்கள் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967 மற்றும் 77இல் வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு" என்றார்.
- யுக்ரேனில் உள்ள அரிய கனிமங்களுக்கு அமெரிக்கா குறி வைப்பது ஏன்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர்
- தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது? 7 மணி நேரங்களுக்கு முன்னர்
மும்மொழிக் கொள்கை பற்றி விஜய் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
தனது கட்சியின் மீது மற்றுமொரு புகார் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "நம் கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களாம். ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாகச் சாதித்துள்ளார்கள். நம் கட்சி எளிய மக்களுக்கான கட்சிதானே.
ஆகவே கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இது ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. முன்பு பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாகிவிடுகிறார்கள்," என்று விமர்சித்தார்.
அதோடு, "இந்த பண்ணையார்களை அரசியலைவிட்டு அகற்றுவதுதான் நம் முதல் வேலை. அதை ஜனநாயக முறைப்படி செய்வோம். அதற்காகத்தான் 2026இல் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு மிக முக்கியமானது பூத் லெவல் முகவர்கள். தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளுக்குத்தான் இந்தக் கட்டமைப்பு வலுவாக இருக்கும் என்பார்கள்.
சுமார் 69,000 பூத்கள் இருக்கின்றன. பூத் ஏஜென்டுகளாக நம் கட்சித் தோழர்களைக் கொண்டு வரப்போகிறோம். பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் எந்தப் பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என்பது அப்போது தெரியும்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மும்மொழிக் கொள்கை குறித்துப் புதிய பிரச்னை ஒன்று கிளப்பிவிடப்பட்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.
"மும்மொழிக் கொள்கை குறித்துப் புதிதாக பிரச்னை ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதாவது, இதைச் செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்குக் கொடுக்க மாட்டார்களாம். எல்.கே.ஜி. யு.கே.ஜி சிறுவர்கள் சண்டை போடுவதைப் போல் இருக்கிறது. கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை, வாங்க வேண்டியது இவர்கள் உரிமை.
ஆனால், தீவிரமான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும்போது இவர்கள் இருவரும் பேசி வைத்துக்கொண்டு, அதாவது பாசிசமும் பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாறி மாறி 'ஹேஷ்டேக்' போட்டு விளையாடுகிறார்கள். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?
இவர்கள் அடித்துக்கொள்வதைப் போல நடிப்பதை நாம் நம்ப வேண்டுமாம். நம் ஊர் சுயமரியாதை உள்ள ஊர். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தை மீறி, மொழிக் கொள்கையை மீறி, வேறொரு மொழியைத் திணித்தால் எப்படி?" என்று பேசி முடித்தார் விஜய்.
- இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?5 மணி நேரங்களுக்கு முன்னர்
விஜயின் பேச்சு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், TVK
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றேகால் ஆண்டுகளே இருக்கும் நிலையில், இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டவரும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளருமான மருது அழகுராஜ், விஜயின் உரை மிக முக்கியமானது என்றார்.
"ஒரு நல்ல தலைவரின் உரை, எதிராளிகளைப் பதற்றமடைய வைக்க வேண்டும். அதேநேரம் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். விஜயின் இன்றைய உரை அதைச் செய்துள்ளது. இது கட்சி நிர்வாகிகளுக்கான மாநாடு என்பதாலும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா என்பதாலும் மத்திய, மாநில அரசுகள் குறித்து இன்னும் கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைக்கவில்லை" என்கிறார் அவர்.
ஆனால், மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம், விஜயின் இந்தப் பேச்சு ஏமாற்றமளித்தது என்கிறார்.
"விஜயின் பேச்சு மிகுந்த ஏமாற்றமளித்தது. எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவான நேரமே அவர் பேசினார் என நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு நிகழ்வில் கட்சித் தலைவரின் பேச்சு மிகுந்த எழுச்சியூட்டும் பேச்சாக இருக்க வேண்டும். அந்தப் பேச்சைக் கேட்கும் நிர்வாகிகள், அதன் முக்கியக் கருத்துகளைத் தங்கள் ஊர்களில் சென்று பரப்பி, பொது மக்களை ஈர்ப்பார்கள்.
ஆனால், அப்படி குறிப்பிடத்தக்க எந்தக் கருத்தையும் அவர் சொல்லவில்லை. மேலும், மும்மொழிக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ஹிந்தி என்ற சொல்லையே அவர் சொல்லவில்லை. ஆட்சியைப் பிடிப்போம் என்று பேசுகிறார். அதுதானே எல்லா அரசியல் கட்சிகளின் லட்சியமும்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Facebook
மேலும், தமிழ்நாட்டில் 1967லிலும் 1977லிலும் நடந்தவற்றோடு 2026ஆம் ஆண்டை ஒப்பிடுவதே மிகத் தவறான ஒப்பீடு என்கிறார் அவர்.
"1967ல் அண்ணாவின் பின்னால் இளைஞர்கள் குவிந்தார்கள் என்கிறார் விஜய். அப்படியெல்லாம் இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியது மாணவர்கள். தி.மு.க. ஒருகட்டத்தில் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டபோதும் அவர்கள் நிறுத்தவில்லை. மேலும், நீண்டகால பொதுவாழ்க்கைக்குப் பிறகு 1967ல் அண்ணா ஆட்சியைப் பிடித்தார். ஆனால், விஜய் அப்படியல்ல.
மேலும் இன்னொரு விஷயமும் அந்தத் தேர்தலில் இருக்கிறது. காங்கிரசை வீழ்த்த வேண்டுமானால் எல்லாத் தரப்பினரின் ஆதரவும் முக்கியம் என உணர்ந்திருந்த அண்ணா, எல்லாத் தரப்பினரையும் இணைத்து ஒரு மிகப் பெரிய கூட்டணியை அமைத்தார். அந்தக் கூட்டணியில் வலதுசாரிக் கட்சியான சுதந்திரா கட்சியும் இருந்தது. இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. 1967ல் அண்ணாவுக்குப் பின்னால், காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டனர். இப்போது தி.மு.க. எதிர்ப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக விஜயின் பின்னால் ஒன்று திரண்டிருக்கிறார்களா?", என்று ஷ்யாம் கேள்வி எழுப்புகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "1977ல் நடந்ததை ஒப்பிடுவதும் தவறு. அப்போது தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. 1972ல் எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு சுமார் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருந்தது. தி.மு.கவிலிருந்து அ.தி.மு.க. பிரிந்தபோது, தி.மு.கவில் மு. கருணாநிதி மீது அதிருப்தியில் இருந்தவர்கள்தான் இங்கே வந்தார்கள். அவர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் அரசியல் அனுபவம் கொண்டவர்கள். ஆகவே இந்த ஒப்பீடும் தவறு" என்கிறார்.
விஜய் அணுகுமுறையால் அதிமுக-வுக்கு ஆபத்தா?

ஆனால், மருது அழகுராஜ், தேர்தல் நெருக்கத்தில் இவையெல்லாம் நடக்கலாம் என்கிறார்.
"விஜய் பூத் கமிட்டிகளை பற்றிப் பேசியிருக்கிறார். பூத் கமிட்டியை யூத் கமிட்டியாக மாற்றக்கூடிய ஆற்றல் தற்போது தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 68,400 பூத்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பூத்திற்கும் 15 இளைஞர்களை நியமிப்பது என்றால் 10 லட்சத்து 26 ஆயிரம் இளைஞர்கள் தேவை. அவ்வளவு இளைஞர்களைக் கொண்டிருக்கும் ஒரே கட்சி த.வெ.கதான்.
மேலும், கூட்டணியைப் பொறுத்தவரை அது தானாக அமையும். அதற்காகத்தான் விக்கிரவாண்டி மாநாட்டில் 'அதிகாரத்தில் பங்கு' என்ற அஸ்திரத்தை விஜய் வீசியுள்ளார். தமிழ்நாட்டை அவர் ஒரு முறை வலம் வந்து முடிக்கும்போது, பல கூட்டணிகளில் இருந்து பல கட்சிகள் அவரிடம் வந்து சேர்வார்கள். இதெல்லாம் முன்பே நடந்தால் சரியாக இருக்காது," என்கிறார் மருது அழகுராஜ்.
ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமை பொறுத்தவரை, "விஜய் கூட்டணியைப் பற்றி ஏதும் பேசாதது, தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சிக்கும் முகமாகத் தன்னை முன்னிறுத்துவது ஆகியவற்றால் அ.தி.மு.கவுக்கே ஆபத்து."
"விஜயுடன் கூட்டணி அமையும் என அ.தி.மு.க. நம்புவதாகத் தெரிகிறது. ஆனால், விஜயின் பேச்சுகளில் அப்படி எந்தத் தொனியும் இல்லை. அவர் இப்போதைக்கு தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக அள்ள நினைக்கிறார். அப்படி நடந்தால், பாதிப்பு யாருக்கானதாக இருக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஷ்யாம்.
இந்தக் கருத்தை மருது அழகுராஜும் ஏற்கிறார். "எடப்பாடி மெகா கூட்டணி அமையுமென கனவு காண்கிறார். ஆனால், அப்படி நடக்கப் போவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தொண்டர்களே அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை, 2026இல் அ.தி.மு.கவின் வாக்குகள் விஜய் பக்கம் வந்துவிடும்" என்கிறார் அவர்.
அதற்கு ஒரு காரணத்தையும் சொல்கிறார் அவர். "அ.தி.மு.க.வின் வாக்காளர்கள், ஒரு தலைவரின் வசீகரத்தால் ஈர்க்கப்படுவார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது அவர்களுக்கான ஈர்ப்பு அப்படிப்பட்டதுதான். இப்போது அந்த ஈர்ப்பு விஜய் பக்கம் மொத்தமாகத் திரும்பும்" என்கிறார் அவர்.
1967, 1977ஆம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Facebook
கடந்த 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ப்ரஜா சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, சி.பா. ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, ம.பொ. சிவஞானம் தலைமையிலான தமிழரசுக் கழகம் ஆகியவை இணைந்து இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. 137 இடங்களையும் சுதந்திரா கட்சி 20 இடங்களையும் பிடித்தன. காங்கிரஸ் கட்சியால் 51 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. 1957, 1962 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தது.
கடந்த 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 1977ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தன.
இருப்பினும், ஜூன் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க, காங்கிரஸ், ஜனதா என நான்கு முனைப் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)